மனிதர்களைப் பற்றிய முன்முடிவு: மனித உறவுகளை எப்படி கெடுக்கிறது?
நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம், பழகுகிறோம். சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்த்த உடனே நமக்குள்ளே ஒரு எரிச்சலோ அல்லது கோபமோ வந்துவிடுகிறது.
அதற்கு அவர்கள் செய்யும் செயல்கள் காரணமல்ல; அவர்களைப் பற்றி நம் மனதிற்குள் நாமே உருவாக்கி வைத்திருக்கும் 'முன்முடிவுகள்' (Prejudgment) தான் காரணம்.
ஒருவரைப் பற்றி நாம் முன்கூட்டியே ஒரு தப்பான பிம்பத்தை மனதில் பதிய வைத்துவிட்டால், அது நம் உறவுகளையும் மன அமைதியையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பற்றி இப்பதவில் விரிவாகக் காண்போம்.
மளிகைக் கடைக்காரரின் முன்முடிவும் கருகிய கடையும்:
ஒரு ஊரில் ஒரு மளிகைக் கடைக்காரர் இருந்தார். அவரிடம் அவசர உதவி என்று கூறி ஒரு நபர் சில மாதங்களுக்கு முன்பு கொஞ்சம் பணம் கடன் வாங்கினார். ஆனால், சொன்னபடி அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி இழுத்தடித்தார்.
இந்தச் சம்பவத்தால் கடைக்காரரின் மனதில் ஒரு 'முன்முடிவு' ஆழமாகப் பதிந்தது—"யாராவது நம்மிடம் அவசரம் என்று பேச வந்தாலே, அவர்கள் நம்மிடம் உதவி (பணம்) கேட்கத்தான் வருகிறார்கள்" என்பதுதான் அது.
சில நாட்களுக்குப் பிறகு, அதே நபர் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடிவந்து, கடைக்குள் நுழையப் பார்த்தார். முகம் முழுக்க பதற்றமும், அவசரமும் அவரிடம் தெரிந்தது.
ஆனால், அவர் கடைக்குள் காலடி எடுத்து வைத்த உடனே கடைக்காரரின் ஆழ்மனம் எச்சரித்தது: "பார்த்தாயா... இவன் மறுபடியும் நம்மிடம் பணம் கேட்கத்தான் ஓடி வருகிறான்!"
அவர் வாயைத் திறந்து ஏதோ சொல்வதற்கு முன்பே கடைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. முகத்தைத் திருப்பிக் கொண்டு, "இங்கே யாருக்கும் காசு தர முடியாது, கிளம்புங்கள்!" என்று கத்தினார்.
வந்தவர் அதிர்ச்சியடைந்தார். தன் கைகளில் இருந்த தண்ணீர் வாளியைக் கீழே போட்டுவிட்டு, "உதவி செய்ய நினைத்த எனக்கு இது தேவையா?" என்று மனமுடைந்து அங்கிருந்து புலம்பியவாறே சென்றார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்... கடைக்காரரின் பின்புறக் குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. மின் கசிவு காரணமாகப் பற்றிய தீ, மளிகைப் பொருட்களைப் பொசுக்கத் தொடங்கியது. "ஐயோ... தீப்பிடித்துவிட்டதே, யாராவது காப்பாத்துங்கள்!" என்று கடைக்காரர் அலறினார்.
அனைவரும் வந்து போராடி தீயை அணைத்தனர். சற்றுமுன் ஓடிவந்த நபர் பணம் கேட்க வரவில்லை. கடையின் பின்புறம் தீப்பிடித்ததை முதலில் கவனித்துவிட்டு, அதைக் கட்டுப்படுத்த கையில் தண்ணீர் வாளியோடு, எச்சரிக்கத்தான் ஓடி வந்தார்! என்று அப்போதுதான் அவருக்கு உறைத்தது.
அவருக்கு உதவி செய்ய வந்த நல்ல மனிதரை, அவருடைய சொந்த 'முன்முடிவு' எப்படி கோபமாக மாறி விரட்டியடித்தது பார்த்தீர்களா? கடைசியில் மிஞ்சியது சாம்பல் மட்டுமே!
நம் கண்ணை மறைக்கும் 'உளவியல் கண்ணாடி' (Mental Filter):
"இவன் நம்மிடம் உதவி கேட்கத்தான் வருவான்" என்று ஒருவரைப் பற்றி நாம் முன்கூட்டியே நினைத்துவிட்டால், அவர் எப்போது பேச வந்தாலும் அவர் மீது நமக்குக் கோபம் வரும்.
நம் மனதில் ஒருவரைப் பற்றி ஒரு 'லேபிள்' (Label) குத்திவிட்டால், அதன் பிறகு அவர் செய்யும் அத்தனை காரியங்களையும் அந்த லேபிள் வழியாகவே நம் மனம் பார்க்கும்.
அவர் உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன், நம்மிடம் நலம் விசாரிக்க வந்திருந்தாலும், "இதற்குப் பின்னால் என்ன சுயநலம் இருக்குமோ?" என்ற தேவையற்ற சந்தேகம் நமக்குள்ளே எரிச்சலையும் கோபத்தையும் வரவழைத்து விடுகிறது.
இது ஒரு நல்ல மனிதரையோ அல்லது ஒரு நல்ல உறவையோ நம் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிடும் ஆபத்தைக் கொண்டது.
முன்முடிவுகளிலிருந்து விடுபட 3 வழிகள்:
அந்தப் பிரத்தியேக கணத்தில் மட்டும் வாழுங்கள்: ஒருவர் பேச வரும்போது, அவருடைய பழைய வரலாற்றையோ அல்லது உங்கள் யூகங்களையோ இடையில் கொண்டு வராமல், அந்தப் பிரத்தியேக கணத்தில் அவர் என்ன பேசுகிறார் என்பதை மட்டும் அமைதியாகக் காதுகொடுத்துக் கேளுங்கள்.
உங்கள் யூகங்களுக்கு மாற்று சிந்தனை கொடுங்கள்: "இவன் ஏதோ சுயநலத்தோடுதான் வருகிறான்" என்ற எண்ணம் தோன்றும்போதே, "ஒருவேளை சும்மா நலம் விசாரிக்க வந்திருந்தால்?" அல்லது "நமக்கு ஏதேனும் உதவி செய்ய வந்திருந்தால்?" என்ற மாற்றுச் சிந்தனையை உங்கள் மனதிற்குள் விதைத்து, கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
மனிதர்களை லேபிள் செய்யாதீர்கள்: ஒருவர் ஒருமுறை தவறு செய்துவிட்டார் என்பதால், அவர் எப்போதும் தவறானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதர்கள் மாறக்கூடியவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு பழகினால், நம் மன அமைதி காக்கப்படும்.
நம் மனதில் ஒரு நபரை பற்றிய தவறான முன்முடிவுகளால் அவர் பேசும் போது, நம்மிடம் அவர்மீது கோபம் மட்டுமே இருக்கும். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உள்வாங்க தவறிவிடுகிறோம். இதுவே தேவையில்லாத பிரச்சனைக்கு காரணமாகிவிடுகிறது.
உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தேவையில்லாத கோபம் வருவதற்கும் வெளிமனிதர்கள் காரணமல்ல; நம் மனதிற்குள் நாம் பூட்டி வைத்திருக்கும் முன்முடிவுகள் தான் காரணம்.
"மனம் தான் எல்லாம்... அதைத் திறந்த புத்தகமாக வைத்திருப்போம், அன்பை விதைப்போம்!"
மனிதர்களின் மனதில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிய முன்முடிவு அல்லது வதந்தி எப்படி சமூக சீர்கேடிற்கான பாதையாக மாறுகிறது என்பதை எனது முந்தைய கட்டுரையில் படிக்கலாம்.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

Comments
Post a Comment