சமூகத்தில் நிம்மதியாக வாழ, அமைதியான சமூகத்தை உருவாக்கும் வழிகள்.

அமைதியான சமூகத்தை உருவாக்கும் வழிகள்


மனிதர்களாகிய நாம் அன்றாடம் எத்தனையோ விஷயங்களைப் பேசுகிறோம், கேட்கிறோம். ஆனால், நாம் பேசும் வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதைப் பல நேரங்களில் உணர்வதே இல்லை. 

மனிதர்கள் இறந்துவிடலாம், ஆனால் அவர்கள் பேசிய வார்த்தைகள் இந்த உலகில் அப்படியே தங்கிவிடுகின்றன. ஒருவரைப் பற்றி நாம் பேசும் நல்ல அல்லது கெட்ட வார்த்தைகள், நாம் மறைந்த பிறகும் மற்றவர்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இதையேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அன்றே சொன்னார்:

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே  

நாவினாற் சுட்ட வடு"

தீயினால் ஏற்படும் காயம் கூடக் காலப்போக்கில் ஆறிவிடும். ஆனால், ஒருவருடைய நாவிலிருந்து வெளிப்படும் தீய வார்த்தைகளால் ஏற்படும் மனக்காயம் அவர் வாழும் காலம் வரை ஆறாத வடுவாகவே இருக்கும்.

வதந்திகள் உருவாக்கும் உளவியல் ஆபத்து:

சமூகத்தில் இன்று மிக எளிதாகப் பரவக்கூடிய ஒன்று ‘வதந்தி’. யாரோ ஒருவர், மற்றொருவரைப் பற்றி ஒரு தவறான தகவலையோ அல்லது அவதூறையோ நம்மிடம் சொல்லிவிட்டால், அதன் பிறகு அந்த நபரைப் பார்க்கும் போதெல்லாம் நம் அறியாமலேயே "இவன் தவறானவனோ?" என்ற எண்ணம் நம் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. உளவியலில் இதனை ‘பாகுபாடான பார்வை’ (Confirmation Bias) என்பார்கள். இதன் விளைவாக, அவர் செய்யும் சாதாரண காரியங்களைக் கூட நம் மனம் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கத் தொடங்கும்.

உதாரணமாக, ஒரு நபர் பொய்யாக நம்மிடம் "நான் இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு இந்த சாலையில் வரும் போது ஒரு பேய் போல் வெள்ளை உருவம் நடந்து செல்வதை பார்த்தேன்" என்று சொன்னால் நாம் இரவு நேரத்தில் அந்த சாலையில் வரும் போது எல்லாம் நம்மை அறியாமலேயே ஒரு பயம் உருவாகும், அதைப்போல் தான் ஒரு மனிதனைப்பற்றிய நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும்.

இந்த வதந்திகள் ஒரு தனிமனிதனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் தெரியுமா?

அவதூறுகளால் அந்த நபரின் வேலை வாய்ப்புகள் பறிபோகும்.

சமூகம் அவரைப் புறக்கணிக்கும் போது வாழ்வாதாரம் இழந்து தவிப்பார்.

"நாம் தப்பே செய்யாத போதும் இந்த உலகம் நம்மைத் தவறாக எண்ணுகிறது, அப்புறம் ஏன் நேர்மையாக வாழ வேண்டும்?" என்ற விரக்திக்குத் தள்ளப்படுவார்.

இறுதியாக, சமூகத்தின் மீதான கோபத்தால், 50 சதவீத வாய்ப்பாக அவர் நிஜமாகவே தவறான பாதைக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு. (Labeling Theory).

பிள்ளைகளைத் தாக்கும் பழிச்சொல்:

ஒருவர் மீது சுமத்தப்படும் வதந்தி அவரோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு தீயைப் போல அவருடைய பிள்ளைகளையும், அடுத்த தலைமுறையையும் மிகக் கொடூரமாகப் பாதிக்கும்.

தப்பு செய்யாத அந்தப் பிள்ளைகள் பள்ளியிலும், தாங்கள் வாழும் பகுதியிலும் "இவனுடைய பெற்றோர் இப்படிப்பட்டவர்கள்" என்று மற்றவர்களால் கேலி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது அவர்களுக்குள் கடுமையான தாழ்வு மனப்பான்மையையும், ஒட்டுமொத்த சமூகத்தின் மீது ஒரு கசப்புணர்வையும் உருவாக்கி விடுகிறது. பிற்காலத்தில் அவர்களின் கல்வி, வேலை, திருமணம் என ஒட்டுமொத்த எதிர்காலத்தையே இது முடக்கிப் போடுகிறது. இதனால் அவர்கள் இச்சமூகத்திற்கு எதிராக திரும்பும் போது வதந்தி பரப்பிய மகனோ/மகளோ கூட பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதை தான் முன்னோர்கள் "தன் வினை தன்னைச் சுடும்" என்றனர்.

வதந்திகளை வெல்லும் 'மனம்': உங்களுக்கான தீர்வு:

நாம் பொதுவாக ஒரு மனிதனை அதிகமாக நம்பும்போது, அவர் எதைச் சொன்னாலும் உண்மை என்று நம்பிவிடுகிறோம்; அதுவே நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவர் எவ்வளவு நல்லதே சொன்னாலும் அதை ஏற்பதில்லை. இது மனித இயல்பு. ஆனால், ஒரு நம்பிக்கைக்குரிய நபர் நம்மிடம் ஒரு வதந்தியைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பாமல் இருக்க நம்மிடம் இரண்டு தீர்வுகள் உள்ளன:

தீர விசாரித்தல்: நமக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவர் ஒருவரைப் பற்றி அவதூறு கூறும்போது, நேரடி ஆதாரம் இல்லாதவரை அதை உண்மையாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

அப்போதே மறந்துவிடுதல் (Ignore): தீர விசாரிக்க நமக்கு உரிமையோ, நேரமோ இல்லாத பட்சத்தில், அதை நம் மனதிற்குள் அனுமதிக்காமல் அப்போதே மறந்துவிடுவதே மிகச் சிறந்தது.

வதந்தியைச் சொல்பவரிடம் "ஏன், எப்படி, எப்போது?" என்ற எந்தக் கேள்வியையும் கேட்காமல், அந்தப் பேச்சை அப்படியே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கேள்விகள் கேட்காமல் மௌனமாக கடந்து போவது பலவீனமல்ல. அது ஒரு அப்பாவியின் வாழ்க்கையையும், நம் சொந்த மன அமைதியையும் காக்கும் மிக பெரிய ஆயுதம்.

எப்போது நாம் பிறரைப் பற்றிய எதிர்மறைப் பேச்சுகளையும், சிந்தனைகளையும் நம் மனதிற்குள் அனுமதிக்காமல் இருக்கிறோமோ, அப்போதே நம் மனம் தூய்மையாகவும், அளவற்ற நிம்மதியோடும் இருக்கும். 

இதற்கு தான் முன்னோர்கள் மெளன விரதத்தை பின்பற்றினர். மெளன விரதத்தினால் ஏற்படும் நன்மைகளை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்(படிக்க இங்கே கிளிக் செய்யவும்).

வதந்திகளைப் பரப்பாமலும், அதை நம்பாமலும் இருக்கும் நேர்மறையான மனமே அமைதியான சமூகத்திற்குத் தேவையான ஆகச்சிறந்த வழிகாட்டி. 

"மனம் தான் எல்லாம்... அதைத் தூய்மையாக வைத்திருப்போம்!"

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.