ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?


ஆமை புகுந்த வீடு ஏன் விளங்காது - அறிவியல் சிந்தனை

இயற்கை படைத்த ஒரு சாதுவான உயிரினத்தை ஏன் நம் முன்னோர்கள் இப்படிப் பழித்தார்கள் என்று தேடியபோது கிடைத்த அறிவியல் உண்மைகளையும், நம்முடைய வலைப்பதிவின் பாணியில் உதித்த ஆன்மீக உளவியல் சிந்தனைகளையும் இணைத்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நம்முடைய 'மனம் தான் எல்லாம்' வலைப்பதிவின் உன்னதமான தத்துவம்—"மனதை கட்டுப்படுத்து, வாழ்வு சொர்க்கமாகும்" என்பதுதான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலும், அறிவியல் ரீதியாகவும் ஆராய்ந்தால் இந்தப் பழமொழிக்கு பின்னால் இரண்டு மிக முக்கியமான கோணங்கள் ஒளிந்துள்ளன.

1.அறிவியல் மற்றும் எதார்த்தக் கோணம்:
பழங்காலத்தில் மனிதர்களின் வாழ்விடங்கள் காடுகளுக்கும் நீர்நிலைகளுக்கும் அருகாமையில் இருந்தன. 

ஆமைகள் பொதுவாக ஈரப்பதம் மிகுந்த, நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலேயே வாழும். ஒரு வீட்டிற்குள் ஆமை தானாக நுழைந்துவிடுகிறது என்றால், அந்த வீட்டின் தரைப்பகுதி அதிக ஈரப்பதத்துடனும், சூரிய வெளிச்சம் இல்லாமலும், மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற சூழலிலும் (Dampness) இருக்கிறது என்று அர்த்தம்.

உண்மையில், பழங்காலத்தில் இப்பழமொழி "ஆம்பி பூத்த வீடு விளங்காது" என்றே கூறப்பட்டிருக்கலாம். ஏனெனில் 'ஆம்பி' என்றால் காளான். சூரிய வெளிச்சம் இல்லாத, பாழடைந்த வீடுகளில் காளான் பூக்கும். 

இத்தகைய அசுத்தமான, ஈரப்பதம் நிறைந்த சூழல் மனிதர்களுக்குப் பல நோய்களையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும் என்ற அறிவியல் காரணத்தால்தான் நம் முன்னோர்கள் அப்படிச் கூறியிருப்பார்கள்.

2.பகுத்தறிவு மற்றும் உளவியல் கோணம்: மனதின் 4 ஆமைகள்:

இனி இதன் அடுத்த முக்கியமான கோணத்தைப் பார்ப்போம். முன்னோர்கள் குறிப்பிட்டது வெறும் விலங்கினமான ஆமையைப் பற்றி மட்டுமல்ல; மனித மனம் என்ற வீட்டில் குடியேறும் நான்கு ஆபத்தான தீய குணங்களாகிய 'ஆமை'களைப் பற்றித்தான்! 

எந்தவொரு குடும்பத்தில் உள்ள மனிதர்களின் மனதிற்குள் இந்த நான்கு 'ஆமை'கள் புகுகின்றனவோ, அந்த வீடு காலப்போக்கில் அழியும். அந்த ஆபத்தான ஆமைகள் இதோ:

கல்லாமை (அறிவில்லாமை): ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்த நல்லறிவும், பகுத்தறிவும் மிக அவசியம். ஆனால், நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் "கல்லாமை" என்னும் குணம் ஒரு மனிதனின் மனதிற்குள் புகுந்துவிட்டால், அவனால் நல்வழியில் சிந்திக்க முடியாது. அறிவு வெளிச்சம் இல்லாத வீடு எப்படி விளங்கும்?

இதைதான் புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ(plato) "கற்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருந்திருக்கலாம்" என்று கல்லாமையை பற்றி கூறியிருக்கிறார்

ஒரு வீட்டில் சூரிய வெளிச்சம் புகாமல் இருந்தால் எப்படி நோய்கள் வருமோ, அதேபோல் அறிவு வெளிச்சம் இல்லாத வீட்டில் துன்பங்கள் வரும்.

முயலாமை (சோம்பேறித்தனம்): வாழ்க்கையில் முன்னேற உழைப்பும் முயற்சியும் தேவை. ஆனால், ஆமை எப்படித் தன் ஓட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறதோ, அதுபோல எந்த ஒரு செயலுக்கும் துணிவில்லாமல், சோம்பேறித்தனத்தோடு முடங்கிக் கிடக்கும் "முயலாமை" ஒருவன் மனதிற்குள் புகுந்துவிட்டால், அந்த வீட்டின் முன்னேற்றம் தடைபடும். 

மனித முன்னேற்றத்திற்கு தெய்வப்புலவர் அன்றே தெளிவாகக் தன் குறளில் கூறியுள்ளனர் 

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்த கூலி தரும்".

தெய்வத்தால் கொடுக்க முடியாததை மனித மனம் முயன்றால் அதை அடையலாம் என்பதை வள்ளுவரின் குறள் எடுத்துரைக்கிறது.

ஆமை புகுந்த வீடு ஏன் விளங்காது - பகுத்தறிவு சிந்தனை



பொறாமை: அடுத்தவர் வாழ்வதைக் கண்டு தன் மனம் வெந்து, தனக்குள்ளேயே வன்மத்தை வளர்த்துக் கொள்ளும் "பொறாமை" என்னும் ஆமை மிகக் கொடியது. 

பிறர் நல்ல நிலைக்கு வருவதைப் பார்த்துப் பொறாமைப்படும் குணம் கொண்டவர்கள் வாழும் வசிப்பிடத்தில், என்றும் நேர்மறை ஆற்றல் (Positive Energy) இருக்காது. 

பொறாமையால் மற்றவர்கள் என்ன பொருள் வாங்கினாலும் தாங்களும் கடன் பெற்று அந்த பொருளை வாங்கி கடன் என்ற மாய வலையில் சிக்கி வாழ்க்கையில் நிம்மதியை இழக்கின்றனர். 

நிறைய மக்கள் பணக்காரனாக வாழ ஆசைப்படாமல், பணக்காரன் போல் வாழ ஆசைப்பட்டு துன்பத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

இல்லாமை (வறுமை மற்றும் பேராசை): இங்கு "இல்லாமை" என்பது வெறும் பணமில்லாத வறுமை மட்டுமல்ல; தன்னிடம் இருக்கும் நல்ல குணங்களும், திருப்தியான மனமும் 'இல்லாமல்' போவதைக் குறிக்கிறது. 

பேராசையினாலும், மனக்கட்டுப்பாடு இல்லாததாலும் எழும் இந்த இல்லாமை, குடும்பத்தின் நிம்மதியை அடியோடு அழித்துவிடும்.

மனதை வெல்வோம்!:
வெளி உலகத்தில் நகர்ந்து வரும் ஆமையோ அல்லது காளானோ ஒருபோதும் வீட்டை அழிக்காது. அதை நாம் அறிவியல் பூர்வமாகச் சரி செய்துவிடலாம்.

ஆனால், நம் மனதைக் கட்டுப்படுத்தத் தவறி, நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் இந்த நான்கு தீய குணங்கள் எனும் ஆமைகள்‌ நம் வாழ்வையே அழித்துவிடும். 

எனவே, நம் மனதை எப்போதும் விழிப்புணர்வுடன் வைத்திருப்போம்;இந்தத் தீய ஆமைகள் நம் மனதிற்குள் புகாமல் தடுத்து, நம் இல்லத்தையும் வாழ்வையும் என்றும் சொர்க்கமாக மாற்றுவோம்!.

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

கடவுளை உணரும் வழி.