தத்துவங்களின் தவறான புரிதலும் மனித பலவீனங்களும்: ஒரு சமூகப் பார்வை.
மனித நாகரிகத்தின் வழிகாட்டியாகவும், வாழ்க்கையின் அனுபவத் திரட்சியாகவும் விளங்குபவை பழமொழிகளும் தத்துவங்களும் ஆகும்.
அவை மனிதனை நல்வழிப்படுத்தவும், அவனது பேராசையைக் கட்டுப்படுத்தவும், இக்கட்டான சூழல்களில் தன்னம்பிக்கை தரவும் உருவாக்கப்பட்டவை.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தங்களின் தனிமனித ஒழுக்கக் குறைபாடு, சோம்பேறித்தனம் மற்றும் தறிகெட்ட பிடிவாதம் ஆகிய பலவீனங்களை மூடிமறைக்க உன்னதமான சமூகத் தத்துவங்களை எப்படித் தவறாகக் கையாளுகிறார்கள் என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
முந்தைய கட்டுரையில் ஒரு தத்துவத்தை ("நாளை என்பது நிச்சயமில்லை") ஆராய்ந்தோம். இக்கட்டுரையில் மேலும் இரண்டு தத்துவங்களை பார்க்கலாம்.
"எல்லாரும் சமம்" – சமத்துவத் தத்துவத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சோம்பேறித்தனம்.
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்", "எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" என்ற சமத்துவ தத்துவங்கள் சமுதாய நீதிக்கு மிக அவசியமானவை.
உண்மையான நோக்கம்: பிறப்பின் அடிப்படையில் யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது; சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சம வாய்ப்பும், நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் தூய நோக்கம்.
தவறான பயன்பாடு: உழைக்கத் தயாராக இல்லாத சோம்பேறி மனிதர்கள், பகலிரவு பாராமல் உழைத்து முன்னேறிய ஒருவனைப் பார்த்து, "அவனிடம் மட்டும் ஏன் இவ்வளவு பணம் இருக்கிறது? எல்லாரும் சமமாகத்தானே இருக்க வேண்டும்?" என்று தத்துவம் பேசுவார்கள்.
மறுக்கப்படும் உண்மை: வாய்ப்புகளில் சமத்துவம் (Equality of Opportunity) என்பது தத்துவம்.
ஆனால், உழைப்பில் சமத்துவம் இல்லாமல், பலன்களில் சமத்துவத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
பகலிரவாக உழைப்பவனுக்கும், நாள் முழுவதும் தூங்குபவனுக்கும் சமமான பலன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தத்துவம் அல்ல, அது பேராசை.
"உலகம் ஆயிரம் சொல்லும்..." – தறிகெட்ட தனத்திற்குச் சாயம் பூசும் தத்துவக்கேடயம்.
"அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான், நாம் நமது பாதையில் செல்ல வேண்டும்" என்ற தத்துவம் இன்று பலரின் தன்னிச்சையான, தவறான முடிவுகளுக்குச் சாயம் பூசும் கேடயமாக மாறிவிட்டது.
உண்மையான நோக்கம்: சமுதாயத்தின் தேவையற்ற விமர்சனங்களுக்குப் பயந்து, தங்களின் தனித்திறமைகளையும், நல்ல லட்சியங்களையும் பாதியிலேயே கைவிட்டுவிடும் சாதனையாளர்களுக்காகச் சொல்லப்பட்டது இது.
சாதிக்க வேண்டும் என்றும், முயற்சியை கைவிடக் கூடாது என்பதற்காக மனதில் ஊக்கத்தை கொடுப்பதற்காக சொல்லப்பட்டது.
பாரதியார், பெரியார், விவேகானந்தர் போன்ற மாமனிதர்கள் சமுதாயத்தின் பழைமைவாத விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டுத் தங்கள் நற்பாதையில் சென்றதால்தான் இன்று சமுதாயம் முன்னேறியுள்ளது.
தவறான பயன்பாடு: ஆனால், இன்று இந்த தத்துவம் தவறான வழியில் செல்பவர்களின் ஆகச்சிறந்த தற்காப்பு ஆயுதமாக மாறியுள்ளது.
ஒரு நபர் சூதாட்டம், போதைப்பழக்கம் அல்லது தவறான கூட்டு போன்ற அழிவுப் பாதையில் செல்லும் போது, அவரது நலவிரும்பிகளோ அல்லது பெற்றோரோ அவரை நல்வழிப்படுத்த அறிவுரை கூறினால், "அடுத்தவன் ஆயிரம் சொல்லும், நான் என் பாதையில்தான் போவேன்" என்று இத்தத்துவத்தைக் கூறி அறிவுரைகளைத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.
"விமர்சனம்" வேறு; "வழிகாட்டுதல்" வேறு! (Criticism vs Guidance):
இந்த தத்துவத்தைத் தவறாகப் புரிந்துகொள்பவர்கள் ஒரு முக்கியமான வேறுபாட்டை உணர்வதில்லை: உலகத்தின் தேவையற்ற 'விமர்சனங்களை' புறக்கணிக்க வேண்டுமே தவிர, நலவிரும்பிகளின் 'வழிகாட்டுதல்களை' அல்ல.
விமர்சனம் (Criticism): நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்யும் போது, உங்களை முடக்க வேண்டும் என்ற நோக்கில் பொறாமையால் அல்லது அவர்கள் உங்களது உண்மையான நோக்கம் புரியாமையால் சொல்லப்படும் வார்த்தைகள். (இதைப் புறக்கணிக்க வேண்டும்).
வழிகாட்டுதல்/அறிவுரை (Guidance): நீங்கள் தவறு செய்யும் போது, உங்கள் மீதான அக்கறையினால் உங்களைக் காப்பாற்றச் சொல்லப்படும் வார்த்தைகள். (இதை ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும்).
"என் பாதை" "என் வாழ்க்கை" என்று சொல்லி ஒருவன் நேராகச் சென்று பள்ளத்தில் விழுவது அவனது தனித்துவம் அல்ல, அது அவனது முட்டாள்தனம்.
"உலகம் ஆயிரம் சொல்லும்" என்ற தத்துவம் நமக்கு துணிச்சலைத் தர வேண்டுமே தவிர, திமிரையோ அல்லது பிடிவாதத்தையோ தரக் கூடாது.
நம் பாதை சரியானதாக இருக்கும் போது உலகத்தின் பேச்சைத் தூக்கி எறியலாம்.
நாம் ஒரு தத்துவத்தைக் கேடயமாகப் பயன்படுத்தும் போது, அது நமது முன்னேற்றத்திற்கானதா அல்லது நம் தவறை மூடி மறைப்பதற்காக என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.
நம் பாதை தவறாக இருக்கும் போது, உலகத்தின் பேச்சைத் திரும்பிப் பார்த்து நம்மை நாமே திருத்திக்கொள்வதே உண்மையான முதிர்ச்சி.
பழமொழிகளும் தத்துவங்களும் "மருந்து" போன்றவை. சரியான நோக்கில் சரியான அளவில் உட்கொண்டால் அது குணமளிக்கும்.
ஆனால், தனக்குத் தேவையான போது, தவறான அர்த்தத்தில் உட்கொண்டால் அது "விஷமாக" மாறிவிடும்.
தத்துவங்களை நம்மைச் செதுக்கப் பயன்படுத்துவோம்; நம் தவறுகளை மறைக்க அல்ல!.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧


Comments
Post a Comment