தற்பெருமை எனும் புதைக்குழி.

 

துன்பத்தை தரும் தற்பெருமை.

துன்பங்களையும் ஆபத்துகளையும் விலை கொடுத்து வாங்கும் அகந்தை!

மனிதர்களாகிய நாம் அன்றாடம் இந்தச் சமூகத்தில் எத்தனையோ மனிதர்களைக் கடந்து போகிறோம். அவர்களில் சிலரைப் பார்க்கும் போது நமக்கு ஒருவித நிம்மதியும், இன்னும் சிலரைப் பார்க்கும் போது தேவையற்ற சலிப்பும் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம், மனிதர்களின் குணாதிசயங்களில் மிக ஆபத்தான ஒன்றாக விளங்கும் 'தற்பெருமை' (Ego & Bragging) ஆகும்.

"மனதை கட்டுப்படுத்து, வாழ்வு சொர்க்கமாகும்" என்ற உன்னதமான தத்துவத்தின்படி பார்த்தால், இந்த தற்பெருமை என்பது நம் மனதை நாமே நரகமாக்கிக் கொள்ளும் ஒரு பேராசை எனலாம். 

தற்பெருமை பேசும் மனிதர்கள் தங்களை அறியாமலேயே ஒரு புதைக்குழிக்குள் இறங்குகிறார்கள். புதைக்குழியில் (Quicksand) கால் வைப்பவர்கள் எப்படித் தங்களை அறியாமலேயே உள்ளே இழுக்கப்பட்டு அழிகிறார்களோ, அதேபோல்தான் தற்பெருமை பேசுபவர்கள் தங்களின் சொந்த வார்த்தைகளாலேயே தங்களை அழித்துக் கொள்கிறார்கள். 

தற்பெருமை பேசுபவர்கள் தங்களின் வாழ்க்கையில் துன்பங்களை ஏதோ ஒரு சந்தையில் ஏலம் எடுப்பதை போலவோ அல்லது அதிக விலை கொடுத்து வாங்குவதைப் போலவோதான் தங்களுக்குத் தாங்களே தேடிக்கொள்கிறார்கள். அது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

திருடர்களுக்குக் கொடுக்கும் மறைமுக அழைப்பிதழ் (பாதுகாப்பு அச்சுறுத்தல்).

"ஆயிரம் ரூபாய் எல்லாம் ஒரு பணமா?", "என் வீட்டு கல்யாணத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக, எத்தனை சவரன் நகையோடு நடத்தினேன் தெரியுமா?" என்று சிலர் பொது இடங்களிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ தற்பெருமை பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். 

ஒருவேளை இவர்களின் இந்த தம்பட்டம் ஒரு திருடனின் காதில் விழுந்தால் என்னவாகும்? இவர்களே தங்களின் வீட்டின் மீதும், சொத்தின் மீதும் திருடர்களின் பார்வையைத் திருப்பி விடுகிறார்கள். 

எடுத்துக்காட்டாக கன்னியாகுமரியில் மதுமிதா என்பவர் வலைதளத்தில் அதிக பணம் உள்ளது என்று பதிவிட்டதால் வீட்டில் திருட்டு நடந்தது.

தற்பெருமைக்காகப் பேசும் சில வார்த்தைகள், வீட்டிற்குள் திருடனை வரவழைத்து, சொத்து இழப்பிற்கு மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாய் முடியும் சூழலை உருவாக்கிவிடுகிறது.

போலியான பிம்பமும் கடன் தொல்லையும்:

"என்னிடம் ஏகப்பட்ட பணம் கொட்டிக் கிடக்கிறது" என்ற போலியான பிம்பத்தை இவர்களே சமூகத்தில் உருவாக்குவதால், சுற்றியிருப்பவர்கள் அவசரத் தேவைக்கு இவர்களிடம் தான் முதலில் ஓடி வருவார்கள். "அவ்வளவு பிரமாண்ட கல்யாணம் பண்ணியவனுக்கு ஒரு ஐம்பதாயிரம் கொடுக்க முடியாதா?" என்று கேட்டு இவர்களின் தகுதிக்கு மீறிய கடன் நெருக்கடியை மற்றவர்கள் தருவார்கள்.

கொடுக்காத போது வரும் வாழ்நாள் மனக்கசப்பு:

தற்பெருமைக்காகப் பேசிய வார்த்தைகளை நம்பி யாராவது ஒருவர் அவசரக் கடன் கேட்கும்போது, இவர்களிடம் உண்மையில் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது கொடுக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

அப்போது "இல்லை" என்று மறுத்தால், வந்தவருக்குக் கோபமும் ஏமாற்றமும் தான் மிஞ்சும். "அவ்வளவு பேசுனான், ஒரு சின்ன உதவி செய்ய கூட துப்பில்லை" என்று சுற்றியுள்ளவர்கள் பேசத் தொடங்குவார்கள். இதனால் தேவையற்ற பகைமைகளும், உறவுகளுக்குள் வாழ்நாள் மனக்கசப்பும் உருவாகும்.

உண்மையான கஷ்டத்தில் உதவி கிடைக்காமல் போவது:

காலச்சக்கரம் சுழலும் போது, இந்தத் தற்பெருமை பேசுபவருக்கே ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம். அப்போது இவருக்கு உதவ நினைப்பவர்கள் கூட, "இவன் தான் ஆயிரம் ரூபாயை எல்லாம் துச்சமாக மதிச்சவன், இவனுக்கு நாம என்ன உதவி பண்றது? இவனே பாத்துக்குவான்" என்று ஒதுங்கிவிடுவார்கள். ஆபத்தில் நீட்டப்படாத கரங்கள் மனிதனை நரக வேதனையில் தள்ளிவிடும்.

தற்காப்புப் பெட்டிக்குள் முடங்கும் அறிவு (வளர்ச்சி தடைபடுதல்):

தற்பெருமை பேசுபவர்கள் எப்போதுமே "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற மாய உலகத்தில் வாழ்கிறார்கள். தற்பெருமை உள்ளவர்கள் தங்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று நினைப்பதால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள். இவர்களின் அகந்தையே இவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறுகிறது.

நாவினால் சுட்ட ஆறாத வடுக்கள் (உறவுகளில் விரிசல்):

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அன்றே சொன்னார்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு"

தீயினால் ஏற்படும் காயம் கூடக் காலப்போக்கில் ஆறிவிடும். ஆனால், ஒருவருடைய நாவிலிருந்து வெளிப்படும் தீய வார்த்தைகளால் ஏற்படும் மனக்கசப்பு ஆறாத வடுவாகவே இருக்கும். 

தற்பெருமை பேசுபவர்கள் பெரும்பாலும் மற்றவர்களைத் தாழ்த்தியும், தங்களை உயர்த்தியும் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இவர்களின் வார்த்தைகள் மற்றவர்களின் மனதை ஆழமாகக் காயப்படுத்தும். எப்போதும் தன் புகழையே பாடுபவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்பட்டுவிடும். 

இதனால் உண்மையான பாசம் காட்டும் நண்பர்களும், நல்ல உறவினர்களும் இவர்களை விட்டு மெல்ல விலகிவிடுவார்கள். இறுதியில் தனிமை என்ற பெரிய துன்பத்தை இவர்கள் பரிசாகப் பெறுகிறார்கள்.

வெளி உலகத்தில் நாம் எவ்வளவு பெரிய வெற்றியாளராகவோ அல்லது பணக்காரராகவோ இருக்கலாம். ஆனால், நம் நிம்மதியையும் பாதுகாப்பையும் காக்க வேண்டுமானால் நம் அகந்தையை (Ego) நண்பர்களிடத்திலும் உறவினர்களிடத்திலும் பேசும் போது, முக்கியமாக பொது வெளியில் பேசும் போதும் கழற்றி வைத்துவிட வேண்டும்.

தற்பெருமை குணத்திலிருந்து விடுபட 3 எளிய தீர்வுகள்:

சுயபரிசோதனை (Self-Reflection): நாம் பேசும் வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்துகிறதா அல்லது தற்பெருமையாக உள்ளதா என்று தினமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நன்றியுணர்வு (Gratitude): நம்மிடம் இருக்கும் திறமைகளும் வசதிகளும் நம் உழைப்பால் மட்டுமல்ல, பலரின் உதவியால் கிடைத்தது என்பதை உணர்ந்து நன்றியோடு இருக்க வேண்டும்.

கேட்பாளராக மாறுதல் (Listening Skill): எப்போதும் நாமே பேசிக் கொண்டிருக்காமல், பிறரின் கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்கப் பழக வேண்டும்.

நிறைகுடம் தளும்பாது:

உண்மையான திறமையாளர்களும், அறிஞர்களும், பெரும் பணக்காரர்களும் எப்போதும் பணிவாகவும் அமைதியாகவும் இருக்கிப்பார்கள். ஏனெனில், பணிவுதான் ஒரு மனிதனை உயர்த்தும்.

தற்பெருமை என்பது துன்பங்களையும், திருட்டுப் பயத்தையும் மட்டுமே விலைக்கு வாங்கித் தரும் ஒரு வெற்று மாயை! மனதைக் கட்டுப்படுத்துவோம், தற்பெருமையைத் தவிர்ப்போம், வாழ்வைச் சொர்க்கமாக்குவோம்!



வாசகர்களே! உங்கள் வாழ்வில் இதுபோன்ற அகந்தை கொண்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா?  உங்கள் கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.