இறுதி முடிவு தெரிந்த பயணம் - பாகம் 2: ஏழைகளின் அழிவும் பணக்காரர்களின் போலியான சொர்க்கமும்!
பணத்தால் வாங்கப்படும் ஆரோக்கியமும் வர்க்க முரண்பாடும்:
முதல் பாகத்தில்(பாகம்-1) நாம் பார்த்த ரசாயன உணவு உற்பத்தியின் இருமுனை ஆபத்திலிருந்து தப்பிக்க, இன்று ஒரு புதிய தந்திரத்தை நவீன உலகம் கண்டுபிடித்திருக்கிறது. அதுதான் 'ஆர்கானிக்' (Organic) எனப்படும் நஞ்சு இல்லாத இயற்கை உணவு. ஆனால், சந்தையில் இதன் விலை சாமானிய மனிதர்களின் கைக்கெட்டாத உயரத்தில் இருக்கிறது. இதேபோல் ஏழைகள் குடிக்கும் ஆலைகளால் மாசு படுத்தப்பட்ட தரமில்லாத குடிநீர். பணக்காரர்கள் குடிப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் (R.O).
இங்குதான் ஒரு கொடூரமான சமூக முரண்பாடு தொடங்குகிறது. பணக்காரன் நஞ்சு இல்லாத உணவை அதிக விலை கொடுத்து வாங்கித் தின்று, ஏசி அறைகளுக்குள் பாதுகாப்பாகத் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்கிறான். மறுபுறம், வறுமையின் காரணமாக ஏழை எளிய மக்கள் ரசாயன நச்சு உணவுகளை உண்டு, நோய்களுக்கும் பஞ்சத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். "பணம் உள்ளவன் பிழைப்பான், பணம் இல்லாதவன் அழிவான்" என்ற இந்த வர்க்க வாதம் தற்காலிகமாக உண்மையாகத் தோன்றலாம். ஆனால், இயற்கையின் கணக்கு மிக விசித்திரமானது.
ஏழைகள் இல்லாத உலகில் பணக்காரர்களின் நிலை என்ன?
பணக்காரர்கள் தங்களின் பண பலத்தால் தப்பித்துவிடலாம் என்று நினைப்பது ஒரு முட்டாள்தனமான மாயை. சமூகம் என்பது ஒரு சங்கிலித் தொடர். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான் இந்தச் சமூகத்தின் அஸ்திவாரம். விவசாய நிலத்தில் வியர்வை சிந்துவது முதல், தொழிற்சாலைகளை இயக்குவது, மின்சாரம் தயாரிப்பது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது என அத்தனை அடிப்படை வேலைகளையும் செய்பவர்கள் இந்த எளிய மக்கள் தான்.
ஒருவேளை இந்தச் சூழல் பேரழிவால் ஏழைகள் அனைவரும் இறந்துவிட்டால், அடுத்த கணமே பணக்காரன் தன் அத்தனை நிலைகளையும் இழப்பான். வங்கியில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு மதிப்பு இல்லாமல் போகும். ஏசி அறைகளுக்கு மின்சாரம் வராது; தொழிற்சாலைகள் முடங்கும்; அவர்களுக்கு நஞ்சு இல்லாத உணவை உற்பத்தி செய்து, சமைத்துப் பரிமாற ஆட்கள் இருக்க மாட்டார்கள். உழைக்கும் வர்க்கம் அழியும்போது, சொகுசு வர்க்கத்தின் வீழ்ச்சி தானாகவே நிகழும்.
வேற்றுகிரகவாசிகளின் பலவீனமும் இயற்கையின் எளிமையான மரணமும்:
ஏற்கனவே ஏசி (AC) அறைகளிலும், டிஜிட்டல் திரைகளிலும் மூழ்கி பூமியின் 'வேற்றுகிரகவாசிகளாக' வாழப் பழகிப்போன பணக்கார வர்க்கத்திற்கு இயற்கையோடு இணைந்து வாழத் தெரியாது; அதற்குப் பழகவும் பிடிக்காது. தலைமுறை தலைமுறையாகச் சொகுசு வாழ்க்கையில் ஊறிப்போனதால், அவர்களிடம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் போராட்டக் குணம் (Fighting Spirit) முற்றிலும் அழிந்திருக்கும்(சிலருக்கு மட்டும்).
அவர்களிடம் தற்காப்புத் திறன்களோ (Survival Skills) அல்லது கடினமான சூழலைத் தாங்கும் நோய் எதிர்ப்புச் சக்தியோ இருக்காது. ஒரு பெருவெள்ளமோ, வறட்சியோ அல்லது ஒரு சமூகச் சீர்குலைவோ ஏற்படும் போது, இவர்களால் இயற்கையோடு போராட முடியாது. காடுகளிலிருந்தும் இயற்கையிலிருந்தும் தங்களை முழுமையாகத் துண்டித்துக் கொண்ட இந்த 'நவீன மனிதர்கள்', இறுதியில் ஒரு சாதாரண விலங்கிடம் கடிபட்டுக் கூட சாகக் கூடிய அளவிற்குப் பலவீனமானவர்களாகவே இருப்பார்கள். ஒருவேளை ஏழைகளோ, பணக்கார்களோ தப்பிப்பிழைத்தாலும் உயிர்வாழ கடுமையாக போராட வேண்டியது இருக்கும். மருத்துவமனை இல்லாத குழந்தை பிறப்பு சாத்தியமா என்றும் தெரியவில்லை.
பணத்தைக் காட்டி இயற்கையிடமிருந்தும், மரணத்திலிருந்தும் தப்பித்துவிடலாம் என்ற மனிதனின் பேராசைக்கு இயற்கை கொடுக்கப்போகும் மரண அடி இதுதான். பிற உயிர்களிடமிருந்து தன் அறிவால் தப்பிப் பிழைத்து, தன் அறிவால் உயர்ந்து பிறகு அறிவாலையே அழியும் ஒர் மிருகம் மனிதன் தான்.
நீங்கள் கேட்கலாம் மனித இனம் முற்றிலும் அழிந்து விடுமா? என்று. அதற்கு என் பதில் இல்லை, ஏனெனில் இன்னும் காடுகளில் ஆதிவாசி மனிதன் வெளி உலக தொடர்பில்லாமல் வாழ்கிறார்கள். நான் இக்கட்டுரையில் சொல்வது "நாம் நாகரீக மனிதர்கள்" என்று பெருமை பேசும் மனிதர்களைப் பற்றி மட்டும் தான்.
ஏழைகளின் அழிவு என்பது பணக்காரர்களின் அழிவிற்கான தொடக்கம் மட்டுமே. இயற்கையின் இறுதித் தீர்ப்பில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடே கிடையாது. தன் சக மனிதனை நச்சுச் சுழலில் தள்ளிவிட்டு, தான் மட்டும் சொகுசு மாளிகையில் வாழ நினைக்கும் வர்க்கத்தின் முடிவு இன்னும் கொடூரமானதாகவே இருக்கும்!
வாசகர்களே! உங்களுக்கு இதிலிருந்து தப்பிப் பிழைக்கும் வழி தெரிந்தால் கருத்துக்களாக தெரிவிக்கலாம்.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

Comments
Post a Comment