பதுக்கல், கடத்தலுக்கு யார் காரணம்? - போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து (பாகம் 2)
கடந்த பதிவில், விலைவாசி உயர்வுக்கு வெறும் வெளிப்புறக் காரணி மட்டும் காரணம் அல்ல; அதற்கு நம் மனதிற்குள் இருக்கும் பேராசைதான் மிக முக்கியக் காரணம் என்பதைப் பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக, இந்த இரண்டாம் பாகத்தில் நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் இரண்டு மிக முக்கியமான உணர்வுகளான 'பயம்' மற்றும் 'ஆசை' எப்படிச் சந்தை விலையைத் தீர்மானிக்கிறது, பதுக்கல் மற்றும் கடத்தல்களுக்கு யார் காரணம், அதனால் ஏற்படும் சமுதாயச் சீர்கேடுகள் என்னென்ன என்பதை எதார்த்தமான சில உதாரணங்களுடன் சிந்திப்போம்.
பயம்: செயற்கை தட்டுப்பாட்டின் தொடக்கம்.
இன்று எனது மனைவி என்னிடம் ஒரு விஷயம் கூறினாள். "அரிசி விலை ஏறப்போகிறதாம், நாம் இப்போதே இரண்டு சிப்பம் (மூட்டை) வாங்கி வைக்கலாமா?" என்று கேட்டாள்.
நான் அவளிடம், "அரிசி விலை தானாக ஏறாது, இப்படி நாம் காட்டும் பயத்தால் தான் ஏறும்" என்றேன்". அவளுக்குப் புரியவில்லை, "அது எப்படி?" என்று கேட்டாள்.
நான் அவளுக்கு விளக்கினேன்:
இப்போது நம் ஊரில் ஒரு அரிசிக் கடை உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதனைச் சுற்றி 100 குடும்பங்கள் இருக்கின்றன. அந்த ஊரின் அரிசித் தேவை 100 சிப்பம் தான். ஆனால், 'விலை ஏறிவிடுமோ' என்ற பயத்தில் பணம் இருப்பவர்கள் ஆளுக்கு இரண்டு சிப்பம் வாங்கினால் என்ன நடக்கும்? கடையில் இருக்கும் 100 சிப்பங்களை முதல் 50 குடும்பங்களே வாங்கி முடித்துவிடும். மீதமுள்ள 50 குடும்பங்களுக்கு அரிசி கிடைக்காது.
அவர்கள் வேறு எங்கேனுமாவது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஒருவேளை அதற்கும் பணம் இல்லை என்றால் அவர்கள் பட்டினியோடு இருக்க நேரிடும்.
வறுமையும் பசியும் ஒரு மனிதனைத் தவறான பாதைக்கு வழிநடத்திவிடும். "நம்முடைய ஒரு சிறு பயம், சமூகத்தில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது பார்த்தாயா?" என்றேன்.
நம்மிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்து நாம் 2 சிப்பம் வாங்க நினைக்கும் போது, பெரிய பணக்காரர்கள் 10 மூட்டை, 20 மூட்டை என வாங்கி வைப்பார்கள். இதற்குப் பெயர்தான் அறியாமையால் உண்டாகும் "பதுக்கல்".
இதனால் ஏழைகள் மேலும் பாதிக்கப்பட்டு, சமூகத்தில் பசிக்காக ஏமாற்று வேலைகளும் திருட்டுகளும் அதிகரித்து, சமுதாயமே சீர்கெட்டுப் போகிறது.
இதைத் தடுக்க வேண்டுமென்றால், "500 ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை, வரும்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று நம் பயத்தைக் கட்டுப்படுத்தி, தேவைக்கு மட்டும் வாங்கினாலே விலை ஏற்றமும் பதுக்கலும் தானாகத் தடுக்கப்படும்.
ஆசை எனும் மாய வலை:
பயத்திற்கு அடுத்தபடியாக நம்மை ஆள்வது 'ஆசை' என்ற மாயை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்று நாம் பார்க்கும் 'தங்கம்'.
தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது, நாம் இப்போதே வாங்கி வைத்தால் பின்னாளில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், நாம் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதால்தான் அதன் விலை ஏறுகின்றது என்ற அறியாமை மாயையில் சிக்கியிருக்கிறோம்.
இங்கு தங்கம் என்பது நாம் முன்பு பார்த்த அரிசிக் கடை போன்றதுதான். இருப்பு குறைவாக உள்ள ஒரு பொருளை ஒரு தலைமுறையினர் வாங்கிச் சேர்த்துக்கொள்கிறார்கள். பின்னர், அடுத்த தலைமுறையினருக்கு, "இப்போது வாங்கு, பின்னாளில் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்" என்று ஆசை வார்த்தை கூறி, நுகர்வு வெறியைக் கடத்துகிறார்கள். இந்த எல்லையற்ற ஆசைதான் விலையைத் தீர்மானிக்கிறது.
இந்த மாய ஆசையை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள எனது முந்தைய கட்டுரையைப் படியுங்கள். 👉 [முந்தைய கட்டுரைக்கான லிங்க்]
கடத்தல்: சமுதாயத்திற்கு எதிரான குற்றம்.
"உள்நாட்டில் வரி அதிகம்" என்று கூறி வெளிநாட்டிலிருந்து தங்கத்தை அறியாமையில் நிறைய மக்கள் வாங்கி வருகிறார்கள். இதற்குப் பெயர்தான் அறியாமையால் "கடத்தல்". இதுவும் மறைமுகமாக ஏழைகளைத்தான் பாதிக்கும்.
எப்படித் தெரியுமா? ஒரு அரசு சிறப்பாகச் செயல்பட மக்களின் வரிப்பணம் தேவை. வரியைச் சேமிக்கிறேன் என்ற பெயரில் தங்கத்தைக் வாங்கும்போது, அரசுக்கு வரி வருவாய் பற்றாக்குறை ஏற்படும். அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட, அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அரசு உயர்த்த வேண்டியதாகிவிடும்.
பள்ளியில் ஒரு மாணவன் செய்யும் தவறுக்காக, தவறு யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தண்டனை கொடுப்பது போலத்தான் இதுவும்!
யாரோ சிலர் செய்யும் வரியை மிச்சப்படுத்தும் செயலால், ஒட்டுமொத்த நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
பதுக்கலும், கடத்தலும் அறியாமையால் யார் செய்கிறார்கள் என்று இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாழ்வில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பின்னாடி ஒளிந்திருப்பது நம் மனம் தான்.
எனவே நண்பர்களே, பேராசைச் சந்தையின் நுகர்வுப் பொருளாக (Consumer) நாம் மாறிவிடக் கூடாது. நம் மனதைக் கட்டுப்படுத்தி, "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற வாழ்வியலோடு, ஆசை, பயமில்லாத நிம்மதியான நல்வாழ்வை வாழ்வோம்!.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧


Comments
Post a Comment