மன அழுத்தமில்லா வாழ்விற்கு ஞானச்சித்தர் பட்டினத்தார் மற்றும் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காட்டும் உன்னத வழி.

ஞானச்சித்தர் பட்டினத்தார்

"ஆவியொடு காயம் அழிந்தாலும்        மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே — மேவிய சீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி."   
                                                          -பட்டினத்தார்.

இன்றைய நவீன உலகில் மனிதனை வாட்டும் ஆகப்பெரிய நோய் 'மன அழுத்தம்' (Stress) ஆகும். 

எப்போதும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற பதற்றமும், சுற்றியிருப்பவர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற பிடிவாதமும் மனிதனின் நிம்மதியைப் பறித்துவிடுகின்றன. 

ஞானச்சித்தர் என்று அழைக்கக்கூடிய 'பட்டினத்தாரும்' தமிழ் எழுத்தாளரும் எனக்கு கடவுளைப் பற்றிய தெளிவை தந்த ஞானி எழுத்துச்சித்தர் 'பாலகுமாரன்' அவர்களும், மனிதன் எவ்வித மன பாரமும் இன்றி, மிக லேசாக வாழ்வதற்குக் கையாண்ட ஆன்மீக மற்றும் வாழ்வியல் தத்துவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன்


செத்தாரைப் போல திரிதல் – அகந்தையை ஒழித்தல்:

அவர்களின் மிக முக்கிய தத்துவம், "மனம் சொல்லும் செயல்களைச் செய்யக் கூடாது; மனம் சாட்சியாக இருக்க வேண்டும். செத்தாரைப் போல திரிந்து பழகுங்கள்" என்பதாகும்.

இதன் பொருள் உடலால் இறந்து போவதல்ல, நமக்குள் இருக்கும் 'அகந்தை' (Ego) மற்றும் தேவையில்லாத மன ஓட்டங்களை இறக்கச் செய்வதாகும். 

ஒரு பிணம் தனக்கு முன்னால் நடக்கும் எந்த ஒரு புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் எதிர்வினை (React) ஆற்றாது. 

அதேபோல, நம்மைச் சுற்றி நடக்கும் தேவையில்லாத விமர்சனங்கள், வம்புகள் மற்றும் சலனங்களுக்கு நாம் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், அமைதியாகக் கடந்து போகப் பழக வேண்டும்.

பிறரின் முடிவுகளில் வாழப் பழகுதல்:

மனித உறவுகளில் சிக்கல்களும் மன அழுத்தமும் எப்போது உருவாகிறது என்றால், "அடுத்தவர்கள் நாம் நினைப்பது போல் நடக்க வேண்டும்" என்று நாம் எதிர்பார்க்கும் போதுதான்.

சுற்றியிருப்பவர்களின் முடிவுகளுக்குள் வாழப் பழகுவது என்பது நம் சுயத்தை இழப்பதல்ல; அது ஒரு உன்னதமான சரணாகதி (Surrender) கலை. 

மற்றவர்களின் முடிவுகளை மாற்ற நாம் போராடாமல், "சரி, இதுதான் இவர்களின் முடிவு. இதன்படி இந்த நொடியை எப்படிக் கடப்பது?" என்று ஒரு பார்வையாளராக ஏற்று வாழும் போது, நம் மனம் பாரமில்லாமல் லேசாகிறது. "நான் நினைப்பதுதான் நடக்க வேண்டும்" என்ற பிடிவாதம் உடையும் போது அக விடுதலை பிறக்கிறது.

"எல்லாம் நன்மைக்கே" – சரணாகதியின் உச்சம்:

சுற்றியிருப்பவர்களின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் போது ஆரம்பத்தில் ஒரு தயக்கமோ அல்லது ஏமாற்றமோ வரலாம். 

ஆனால், "நடப்பவை அனைத்தும் என் நன்மைக்கே" என்ற ஆழமான புரிதல் நமக்குள்ளே இருக்கும்போது, மற்றவர்களின் முடிவுகள் நம்மைப் பாதிக்காது.

எதிர்ப்பற்ற நிலை: சூழ்நிலைகளும் மனிதர்களும் நம் எண்ணப்படி நடக்காதபோது, "இதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது" என்று கடந்து போகும் பக்குவம் வந்துவிடுகிறது.

பாரமில்லாப் பயணம்: அடுத்தவர்களின் முடிவுகளைப் பாரமாக நினைக்காமல், "எல்லாம் நன்மைக்கே" என்று இயற்கையின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நகர்வதே உண்மையான மன நிம்மதியைத் தரும்.

ஆற்றின் பாதை – இயற்கையோடு இயைந்த வாழ்வு:

வாழ்க்கைக்கு மிகச்சிறந்த உவமை 'ஆறு' ஆகும். 

ஒரு ஆறு தன் பாதையைத் திட்டமிட்டு வடிவமைப்பதில்லை; அது இயற்கையாக இருக்கும் பாதையில், தடைகளை விலக்கி ஓடுகிறது.

மன அழுத்தமில்லா வாழ்வு

தன் பாதையில் ஒரு பெரிய பாறை வந்தால், ஆறு அதனுடன் சண்டையிடுவதில்லை. 

தன் போக்கை மாற்றிக்கொண்டு, அந்தப் பாறையைச் சுற்றிக்கொண்டு ஓடத் தொடங்கிவிடும். 

அது தன் பாதையை இழந்ததாக நினைப்பதில்லை; மாறாக, "இந்தத் திசைமாற்றமும் நன்மைக்கே, இது என்னை இன்னும் வேகமாக கடலை நோக்கிக் கொண்டு சேர்க்கும்" என்று நம்பி ஓடுகிறது. 

நாமும் வாழ்க்கையை நாமே வடிவமைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையோடு (Flexibility) வளைந்து கொடுத்து, இயற்கையின் போக்கோடு (Go with the flow) வாழ வேண்டும்.

மனம் சாட்சியாக இருத்தல்:

மனம் எப்போதும் எதிர்காலத் திட்டமிடலிலும், கடந்த காலக் கவலையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. 

எந்த யோசனையும், எந்தத் திட்டமிடலும் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழப் பழக வேண்டும் என்கின்றனர்.

உணவு கிடைத்ததா சாப்பிடு, மழை பெய்ததா குளி. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு, ஒரு பார்வையாளராக (Witness) மட்டும் நின்று வேடிக்கை பார்க்கப் பழகினால் மன அழுத்தம் நம்மை நெருங்கவே முடியாது. உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொண்டால் நிம்மதி தானாக வரும்.

சூழ்நிலைகள் நம்மைத் தாக்கும் போது அதற்குள் சிக்கி நம்மை இழக்காமல், எதையும் ஒரு சாட்சியாக நின்று பார்த்து அமைதியைக் கையாள்வதே "செத்தாரைப் போல திரிந்து" வாழும் கலை. 

பாதையை வடிவமைக்க முற்படாமல், இருக்கும் பாதையில் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப் போல, நாமும் நம் அகங்காரத்தைக் கைவிட்டு, "எல்லாம் நன்மைக்கே" என்ற நம்பிக்கையுடன் இயற்கையின் போக்கில் வாழ்ந்தால், மன அழுத்தமில்லாத பேரானந்த பெருவாழ்வை வாழ முடியும் என்பதே ஞானசித்தர் பட்டினத்தாரும் எழுத்துச் சித்தர் பாலகுமாரரும் நமக்கு உணர்த்தும் பாடம்.

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.