கண்ணை நம்பாதே, அறிவை நம்பு - பாகம் 2 (அரசியலின் போலி முகமும், சாமானியனின் நிஜமான தியாகமும்!)

கண்ணை நம்பாதே அறிவை நம்பு

நம்முடைய ‘மனம் தான் எல்லாம்’ வலைப்பதிவின் உன்னதமான தத்துவம்—"மனதை கட்டுப்படுத்து, வாழ்வு சொர்க்கமாகும்" என்பதுதான். 

ஆனால், இன்றைய மின்னல் வேக உலகில் நம் மனதை மிக எளிதாக ஆக்கிரமித்து, நம்மை உணர்ச்சிவசப்பட வைத்து, சமுதாயத்தையே நரகமாக்கிக் கொண்டிருப்பது எது தெரியுமா? அதுதான்—அரசியல் களத்தில் பரப்பப்படும் போலி பிம்பங்களும், நச்சுத்தனமான விளம்பரப் பரப்புரைகளும்!

மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒரு கட்சித் தொண்டரோ அல்லது தலைவரோ மாற்றுக்கட்சியினரை மிருகத்தனமாகத் திட்டுவதையும், அடித்துக் கொள்வதையும் நாம் தினமும் பார்க்கிறோம். 

"மக்களுக்கு நல்லது செய்யத்தான் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம், நாட்டிற்காக எங்களை அர்ப்பணித்துவிட்டோம்" என்று முழங்கும் இவர்கள், நல்லது செய்வதற்கு ஏன் இப்படி அடித்துக் கொள்ள வேண்டும்? இவர்கள் சொல்வதுதான் உண்மையான அர்ப்பணிப்பா? இதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளை நம் அறிவு கொண்டு ஆராய்வோம்.

🏡 20 வீடுகள் உதாரணம் காட்டும் உண்மை!:

நம் தெருவில் ஒரு 20 வீடுகள் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்வோம். அந்தத் தெருவில் இருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பக்கத்துத் தெருவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதருக்குத் தோன்றுகிறது. அவர் என்ன செய்வார்?

விடிவதற்குள் அமைதியாக வந்து தெருவைக் கூட்டிச் சுத்தப்படுத்துவார்.

தெருவிளக்கு எரியாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதைச் சரி செய்வார்.

தெருவில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால், ஓடோடிப் போய் மருத்துவ உதவி செய்வார்.

சிந்தித்துப் பாருங்கள்... இந்த நன்மைகளை அந்த 20 வீடுகளுக்குச் செய்வதற்கு, அவர் யாரிடமாவது சண்டை போட வேண்டுமா? அல்லது "நான் தான் இந்தத் தெருவுக்கு நல்லது செய்வேன், வேறு யாரும் வரக்கூடாது" என்று மற்றவர்களோடு வீதியில் இறங்கி அடித்துக் கொள்ள வேண்டுமா? நிச்சயமாக இல்லை! நல்லது செய்ய நினைக்கும் எவருக்கும் சண்டையோ, பகையோ தேவையே இல்லை.

அப்படியென்றால், "உங்களுக்கு நல்லது செய்யவே என் உயிரைக் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகள் மட்டும் ஏன் இப்படித் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள்? உண்மை நோக்கம் 'மக்களுக்கு நல்லது செய்வது' என்றால் அங்கே சண்டைக்கு இடமே இருக்காது. 

ஆனால், அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம் நல்லது செய்வது அல்ல; "அதிகாரத்தைக் கைப்பற்றுவது" மற்றும் "சுயநலம்" மட்டுமே.

📦 அரசியல்: மக்கள் சேவையா? அல்லது லாபம் தரும் தொழிலா?:

நம் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டிய மற்றொரு எதார்த்தமான உண்மை உண்டு. 

உலகத்தில் எந்த ஒரு தொழிலில் அல்லது வியாபாரத்தில் அதிகப்படியான லாபமும் வருமானமும் வருகிறதோ, அதைச் செய்யத்தான் மனிதர்களுக்குள் போட்டி, பொறாமை மற்றும் சண்டைகள் வரும். 

நஷ்டம் தரும் ஒரு தொழிலுக்காகவோ அல்லது வருமானமே இல்லாத ஒரு சேவைக்காகவோ யாராவது வீதியில் இறங்கி அடித்துக் கொள்வார்களா?

"அரசியல் என்பது வருமானம் இல்லாத மக்கள் சேவை, அது ஒரு தியாகப் பாதை" என்று மேடைகளில் முழங்குவது உண்மையானால், அந்தச் சேவைப் பதவிக்காக ஏன் இத்தனை போட்டிகளும், கோடிக்கணக்கான பண விநியோகங்களும் நடக்க வேண்டும்? எந்த ஒரு லாபமும் இல்லாத பொதுச்சேவை செய்ய இவர்களுக்குள் ஏன் இந்த அளவுக்குப் போட்டி வர வேண்டும்? இதிலிருந்தே தெரிகிறது, அரசியல் என்பது இன்று மக்கள் சேவையாக இல்லை; அது தலைமுறை தலைமுறைக்குச் சொத்து சேர்க்கும் மிகப் பெரிய லாபகரமான 'தொழிலாக' மாறிவிட்டது!

👑 தியாகச் செம்மல்களின் வாரிசு அரசியல் நாடகம்!:

பொதுவாக, இந்த உலகத்தில் எந்தவொரு தகப்பனும் தான் பட்ட கஷ்டங்களை தன் மகன் படக்கூடாது என்றுதான் நினைப்பான். 

ஒரு தந்தை வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியாக இருந்தால், தன் மகன் படித்து ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக வேலை செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்.

அரசியல்வாதிகள் சொல்வது போல, அரசியல் என்பது முள் படுக்கை, அது நாட்டை நல்வழிப்படுத்த அவர்கள் செய்யும் பெரும் 'தியாகம்' என்றால், அந்த முள் படுக்கையில் ஏன் தங்கள் வாரிசுகளையும், பிள்ளைகளையும் கொண்டு வந்து அமர வைக்கிறார்கள்? எந்தத் தகப்பனாவது தன் பிள்ளையைத் வேண்டும் என்றே கஷ்டமான தியாகப் பாதையில் தள்ளிவிடுவாரா?

அரசியல் என்பது கஷ்டங்கள் நிறைந்த தியாகப் பாதை அல்ல; அது சுகபோகங்களும் அதிகாரமும் நிறைந்த சொர்க்கப் பாதை என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

அதனால்தான், கட்சியின் அடிமட்டத் தொண்டன் காலம் முழுவதும் கொடி பிடிக்கும் தொண்டனாகவே இருக்கும்போது, தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் நேரடியாக வந்து உயர் பதவிகளில் அமர்கிறார்கள். இந்த வாரிசு அரசியல் நாடகத்தை விடப் பெரிய சமூக அநீதி வேறொன்றும் இருக்க முடியாது!

🚢 போர்க்கப்பல் முதல் இலவசப் பயணம் வரை: அது அவர் வீட்டுப் பணமா?:

அரசியல்வாதிகள் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தோன்றி தம்பட்டம் அடித்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம்:

மத்திய அரசில் இருப்பவர்கள், "நாட்டு மக்களுக்காக அதிநவீனப் போர்க்கப்பலை அர்ப்பணித்தார்", "ராணுவத் தளவாடங்களைத் தியாகம் செய்தார்", "புல்லட் ரயிலை அர்ப்பணித்தார்" என்று விளம்பரம் செய்கிறார்கள்.

மாநில அரசில் இருப்பவர்கள், "ஏழைகளுக்கு இலவச வீடு கட்டிக் கொடுத்தார்", "மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணம் கொடுத்தார்" என்று தங்கள் படத்தைப் போட்டுப் பறைசாற்றிக் கொள்கிறார்கள்.

நம் அறிவு இங்கேதான் விழித்துக் கொள்ள வேண்டும். அந்தப் போர்க்கப்பலையோ, இலவச வீடுகளையோ அல்லது பேருந்துப் பயணத்தையோ அவர்கள் தன் சொந்தப் பணத்திலோ அல்லது தன் வீட்டுப் பணத்திலோ வாங்கி மக்களுக்குக் கொடுத்தார்களா? இல்லவே இல்லை!

ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை, காலையில் இருந்து இரவு வரை வியர்வை சிந்தி உழைத்துச் செலுத்தும் 'மக்களின் வரிப்பணம்' அது. மக்களின் பணத்தை எடுத்து, மக்கள் நலனுக்காகச் செலவழித்துவிட்டு, ஏதோ தாங்கள் சொந்தக் காசில் வாங்கித் தியாகம் செய்தது போலத் தங்கள் முகங்களைப் போட்டு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்.

🏷️ கொடுமையிலும் கொடுமை: "இது எங்கள் திட்டம்" என்ற சண்டை!:

இந்த விளம்பரக் கூத்துகளின் உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால், மக்களின் வரிப்பணத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்திற்கு, "இது நாங்கள்தான் கொண்டு வந்தோம், இல்லை நாங்கள்தான் கொண்டு வந்தோம்" என்று அரசியல் கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதுதான்!

மத்திய அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால், அதற்கு மாநில அரசு உரிமை கொண்டாடும். 

மாநில அரசு ஒரு மக்கள் நலத்திட்டத்தைச் செயல்படுத்தினால், அதற்குத் தாங்கள்தான் காரணம் என்று மத்திய அரசு சண்டையிடும். 

இன்னும் ஒருபடி மேலே போய், முந்தைய ஆட்சியில்  கட்ட திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஒரு பாலத்தையோ அல்லது சாலையையோ, தற்போதைய ஆட்சி தங்களுடையது என்றும் இல்லை எங்கள் திட்டம் என்று முந்தைய ஆட்சயாளர்கள் எங்களது என்றும் 'ஒட்டுவில்லை' (ஸ்டிக்கர்) ஒட்டி விளம்பரம் செய்யும். 

பொதுமக்களின் பணத்தை எடுத்துச் செய்யும் ஒரு கடமைக்கு, இவர்கள் தங்களுக்குள் பினாமிகளைப் போல உரிமை கோரி சண்டை போடுவது எவ்வளவு பெரிய கேடுகெட்டத்தனம்?

🤦‍♂️ சாமானிய மக்களின் அறியாமை: உழைப்பு யாருடையது? மகிழ்ச்சி யாருக்கு?:

இவை எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், பொதுமக்களாகிய நாமும் இது நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துச் செலுத்திய வரிப்பணம் என்பதை உணராமல், அரசியல்வாதிகள் ஏதோ தங்கள் சொந்தப் பணத்தை நமக்கு வாரி வழங்குவது போல நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்!

காலையில் எழுந்து கூலி வேலைக்குச் செல்லும் ஒரு ஏழைத் தொழிலாளி, மாலையில் ஒரு குளியல் சோப்போ, தீப்பெட்டியோ அல்லது தன் குழந்தைக்கு ஒரு மாவுப்பண்டப் (பிஸ்கட்) பாக்கெட்டோ வாங்கும்போது கூட அரசாங்கத்திற்கு 'வரி' செலுத்துகிறான். 

அப்படி இந்த நாட்டின் ஒவ்வொரு சாமானியனும் இரவும் பகலும் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப்பணத்தில் தான் அரசாங்கத்தின் கஜானா நிறைகிறது.

நம்முடைய பணத்தை எடுத்து நமக்கே கொடுக்கும்போது, நாம் ஏன் அவர்களுக்குக் கைதட்ட வேண்டும்? நாம் ஏன் அவர்களைத் தியாகிகளாகக் கொண்டாட வேண்டும்? "என் பணத்தை எனக்குத் தர நீ யார்? அதில் உன் படத்தை ஒட்ட நீ யார்?" என்று கேட்க வேண்டிய மக்கள், "அவர் எனக்கு அதைத் தந்தார், இவர் எனக்கு இதைத் தந்தார்" என்று அறியாமையில் ஆடுவதுதான் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது.

🪖 எல்லைக் காவலனின் நிஜமான தியாகம்!:

மக்களின் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, மக்களின் பணத்தில் சொகுசு கார்களிலும், குளிரூட்டப்பட்ட (ஏசி) பங்களாக்களிலும் வாழும் அரசியல்வாதிகள் எங்கே? உண்மையான தியாகிகள் எங்கே? 

பெற்ற மகனையோ, மகளையோ நாட்டின் எல்லையைக் காக்கும் ராணுவத்தில் சேர்க்கும் அந்தச் சாமானிய பெற்றோர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான தியாகிகள்!

தன் உயிரைப் பணயம் வைத்து ஒரு ராணுவ வீரன் எல்லையில் நிற்கிறான். அவன் அங்கே சொகுசு பங்களாவிலோ அல்லது குளிரூட்டப்பட்ட காரிலோ அமரவில்லை. 

"நாட்டிற்காக என் மகனின் உயிர் போனாலும் பரவாயில்லை" என்று நெஞ்சில் ஈரத்தோடும், தேசப்பற்றோடும் தன் பிள்ளையை ராணுவத்திற்கு அனுப்பிவிட்டு, இங்கே கிராமத்தில் வறுமையிலோ வாழும் பெற்றோர்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதேனும் உண்டா?

⚖️ விழித்தெழும் கேள்வி: அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் வரட்டும்!:

இங்கேதான் ஒரு நியாயமான, புரட்சிகரமான கேள்வி எழுகிறது. 

தேசப்பற்றையும் மக்கள் நலனையும் பற்றிப் பேசும் எந்த ஓர் அரசியல்வாதியாவது தன் பிள்ளையை ராணுவத்திற்கு அனுப்புகிறாரா? சாமானிய மக்களின் பிள்ளைகளை நாட்டின் எல்லையில் துப்பாக்கி முனையில் நிறுத்திவிட்டு, தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சொகுசுப் படிப்புகளையும், தொழில்களையும் கவனிக்க வைக்கிறார்கள்.

"தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு அரசியல்வாதியும் தன் மகனையோ அல்லது மகளையோ கட்டாயம் நாட்டின் ராணுவத்தில் சேர்க்க வேண்டும்" என்ற சட்டம் மட்டும் வந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அப்போதுதான் தெரியும் யார் உண்மையான தேசப்பற்றாளன், யார் உண்மையான மக்கள் நலன் கொண்ட அரசியல்வாதி என்று! அப்படி ஒரு சட்டம் வந்தால், இன்று மேடைகளில் போலியாக முழங்கும் பாதி அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் அந்த சட்டத்தையும் அவர்கள் தான் கொண்டு வரவேண்டும்‌.

🧠 மனித மனமே விழித்தெழு! (அறிவை முதலாளியாக்கு):

அரசியல்வாதிகள் வீசும் உணர்ச்சிவசப்படும் வலைக்குள் நம் மனம் சிக்கிக் கொள்ளக் கூடாது.

"எனக்கு நல்லது செய்ய வருகிறவன் ஏன் இன்னொருவனுடன் சண்டை போட வேண்டும்? மக்கள் வரிப்பணத்தில் செய்யும் திட்டங்களுக்கு இவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்? தன் பிள்ளையை ராணுவத்திற்கு அனுப்பாதபோது, இவர்களின் தியாகத்தை நாம் ஏன் நம்ப வேண்டும்? அது மக்கள் சேவை என்றால் ஏன் வியாபாரத்தைப் போலப் போட்டி வர வேண்டும்?" என்ற கேள்விகளை நம் அறிவு கேட்கத் தொடங்க வேண்டும்.

அரசியல்வாதிகள் காட்டும் போலி பிம்பங்களையும், வாரிசு அரசியல் நாடகங்களையும், அவர்கள் நடத்தும் ஒட்டுவில்லைச் சண்டை கூத்துகளையும் நம்பி ஏமாறாமல், இது நம்மீது நடத்தப்படும் உணர்ச்சி நாடகம் என்பதை உணர்ந்து, நிஜமான அர்ப்பணிப்பை அடையாளம் கண்டு, வாக்குகள் செலுத்துவோம்.

கண்ணை நம்பாமல் அறிவை நம்பி மனதை வேலைக்காரனாக்குவோம், அறிவை முதலாளியாக்குவோம்!

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.