கடவுள் வழிபாடு பக்தியா? பயமா? – நிதான வழிபாட்டின் ஆன்மீக உளவியல்.

கடவுள் வழிபாடு என்பது பக்தியா? பயமா

இன்றைய பரபரப்பான காலகட்டத்திலும், காலையில் எழுந்து கோவிலுக்குச் செல்லும் பலரை நாம் காண்கிறோம். ஆனால், அவர்களின் வழிபாட்டு முறையைக் கூர்ந்து கவனித்தால் ஒரு சுவாரசியமான உண்மை புலப்படும்.

கோவிலுக்குள் மிக அவசரமாக ஓடி வருவார்கள், சாமியைப் பார்த்ததும் வேகவேகமாகக் தலையில் குட்டிக் கொள்கிறார்கள், கும்பிட்டுவிட்டு அடுத்த நொடியே பறந்து விடுவார்கள்.

இதைப் பார்க்கும் போது நம் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: கோவிலுக்குச் செல்வது பக்தியா அல்லது பயமா?.

வாருங்கள் இக்கட்டுரையில் இதை கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம்.

அவசர வழிபாட்டின் பின்னால் இருக்கும் 'பயக் காரணி'.

ஒருவர் கோவிலில் அவசர அவசரமாகக் கும்பிட்டுவிட்டு ஓடுவதைப் பார்க்கும்போது, அங்கே கடவுள் மீது இருக்கும் அன்பை விட, "கெட்டது நடந்துவிடுமோ என்ற பயமும், ஒருவித கடமைக்காகச் செய்யும் மனநிலையும்" அதிகமாகத் தெரிகிறது.

பரிகார மனநிலை (Fear of Bad Luck): "இன்று கோவிலுக்குப் போகவில்லை என்றால் காரியம் கெட்டுவிடும்" அல்லது "குலதெய்வத்தைக் கும்பிடாவிட்டால் தப்பாகிவிடும்" என்ற பயம் பலரது மனதில் ஆழமாகப் பாய்ந்திருக்கிறது. இதனால் அன்போடு வழிபடுவதை விட, ஒரு ஆபத்திலிருந்து தப்பிக்க நினைப்பது போல மக்கள் அவசரமாகக் கும்பிடுகிறார்கள்.

பழக்கவழக்கக் கடமை (Routine Duty): பலருக்கு இது ஒரு தினசரி வழக்கம். 'இன்றைய நாளுக்கான ஆன்மீகக் கடமையை முடித்துவிட்டோம்' என்று தங்களின் மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்ளவே இத்தகைய அவசர வழிபாடு நிகழ்கிறது.

பக்தி மற்றும் பயத்தின் கலவை:

மக்கள் கோவிலுக்குச் செல்வதற்கு பக்தியும் பயமும் கலந்த ஒரு கலவையான மனநிலையே முதன்மைக் காரணமாக இருக்கிறது.

வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சோதனைகள், உடல்நலக் குறைவு, எதிர்காலம் பற்றிய பயம் வரும்போது இறைவனின் துணை தேவை என்ற எண்ணத்தில் தஞ்சம் அடைவது.

அவசர வழிபாட்டில் பக்தி இருந்தாலும், அதைவிட "செய்து முடிக்க வேண்டும்" என்ற பதற்றமும் பயமும் அதிகமாக வெளிப்படுகிறது. நிதானம் இல்லாத வழிபாடு பெரும்பாலும் பயத்தின் வெளிப்பாடாகவே முடிகிறது.

ஆன்மீகத்தில் புகுந்த 'வாடிக்கையாளர் சேவை' மனநிலை:

இன்றைய அவசர உலகத்தில் மனிதர்களுக்கு எல்லாமே உடனடியாகக் கிடைக்க வேண்டும் (Instant Gratification). 2 நிமிடத்தில் நூடுல்ஸ், 10 நிமிடத்தில் உணவு டெலிவரி எனப் பழகிவிட்ட மனிதன், கடவுளிடமும் அதையே எதிர்பார்க்கிறான்.

கோவிலுக்குச் சென்று நிதானமாக அமர்ந்து இறைவனை உணர்வதை விட, ஒரு ஏடிஎம் (ATM) மையத்திற்குச் சென்று கார்டைச் சொருகிப் பணத்தை எடுப்பது போல, கடவுளிடம் கோரிக்கைப் பட்டியலை அவசரமாகச் சமர்ப்பித்துவிட்டு, "நான் கும்பிட்டுவிட்டேன், நீ என் காரியத்தை உடனே முடித்துக்கொடு" என்ற ஒருவித வணிக ரீதியான மனநிலையே இந்த அவசர வழிபாட்டிற்கு முக்கியக் காரணம்.

நிதானமாக வணங்குவதுதான் கடவுளை உணரும் வழி:

நூறு முறை அவசரமாகக் கும்பிடுவதை விட, ஒரே ஒரு நிமிடம் கண்ணை மூடி, நிதானமாக, மனதார வணங்குவதுதான் இறைவனுடன் நம்மை இணைக்கும் சிறந்த வழி. ஏனெனில், நிதானமாக வணங்குவதுதான் கடவுளை உணரும் உண்மையான வழி.

நிதானமாக வழிபடும்போது மட்டுமே நம் வாழ்வில் பின்வரும் உன்னத மாற்றங்கள் நிகழ்கின்றன:

மன ஒருமைப்பாடு (Focus): அவசரம் இல்லாதபோதுதான் நம் மனம் சிதறாமல், நாம் வணங்கும் இறைவனின் மீதோ அல்லது அந்த அமைதியின் மீதோ முழுமையாக லயிக்க முடிகிறது.

பயமற்ற அன்பு (Pure Devotion): பயத்தில் கும்பிடுபவர்கள் அவசரமாக ஓடுவார்கள். ஆனால், கடவுள் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டவர்கள், அவரிடம் பேசுவது போல நிதானமாக, மன அமைதியுடன் நேரத்தைச் செலவிடுவார்கள்.

நேர்மறை ஆற்றல் (Positive Energy): கோவிலின் அமைதியான சூழல், விளக்குகளின் ஒளி, நறுமணம் போன்றவற்றை நம் மனமும் உடலும் உள்வாங்கிக் கொள்ள ஒரு குறிப்பிட்ட நேரமும் நிதானமும் தேவைப்படுகிறது. அவசரமாக வந்து செல்பவர்கள் இந்த அற்புதமான அமைதியைத் தவறவிட்டு விடுகிறார்கள்.

முரண்பாட்டின் உச்சம்: சாமி கும்பிட்டு விட்டு வாகனத்தில் வேகமாகப் பறப்பது!.

கோவிலுக்குள் காட்டும் அவசரத்தை விட, கோவிலை விட்டு வெளியே வரும்போது காட்டும் அவசரம் இன்னும் ஆபத்தானது.

 கோவிலுக்குள் இருக்கும் வரை இறைவனிடம் "என்னைக் காப்பாற்று" என்று வேண்டிவிட்டு, வாசலுக்கு வந்த அடுத்த நொடியே 'நேரமாகிவிட்டது' என்று வாகனத்தை அதிவேகமாக இயக்கும் மனிதர்களை நாம் பார்க்கிறோம்.

அமைதியைத் தொலைக்கும் அவசரம்: கோவிலுக்குள் நிதானமாக இருந்து பெற்ற அத்தனை மன அமைதியையும், வாசலுக்கு வந்து வாகனத்தை வேகமாக இயக்கும் அந்த ஒரே ஒரு நொடிப் பதற்றத்தில் மனிதர்கள் முழுமையாகத் தொலைத்து விடுகிறார்கள்.

விழிப்புணர்வே ஆன்மீகம்: 

"நான் தான் சாமியைக் கும்பிட்டுவிட்டு வருகிறேனே, எனக்கு ஒன்றும் ஆகாது" என்ற குருட்டு நம்பிக்கையில் பலர் சாலை விதிகளை மதிக்காமல் வேகமாகச் செல்கிறார்கள். பக்தி என்பது விழிப்புணர்வோடு இருப்பது, அலட்சியமாக இருப்பது அல்ல. பயணமும் வழிபாட்டின் ஒரு பகுதிதான் என்பதை உணர வேண்டும்.

இருக்கைக்காகச் சண்டை – வழிபாட்டின் பலனைத் தொலைக்கும் தருணம்!.

எங்களது ஊரின் அருகில் புகழ்பெற்ற இராமசாமி கோவில் என்ற தளம் உள்ளது. நேற்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையன்று பெண்கள் கூட்டம் அலைமோதியது.

பெண்கள் கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் பேருந்தில் ஏறி, ஒரு இருக்கைக்காக (Seat) இரு பெண்மணிகள் சண்டை போட்டுக்கொண்டார்கள். இதைப் பார்த்ததும் தான் என்னை இந்த கட்டுரை எழுத தூண்டியது.

அதிர்வுகளைத் தொலைத்தல்: கோவிலில் நிதானமாக வணங்கி, நம் மனதிற்குள் நாம் சேர்த்து வைத்த அந்த நல்ல அதிர்வுகளும் (Positive Vibrations) அமைதியும், பேருந்தில் சண்டை போடும் அந்த ஒரு நொடி ஆத்திரத்தில் முழுமையாக வீணாகிவிடுகிறது. இதற்கு பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம்.(பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம் என்பதைப்போல்)

சக மனிதனிடம் அன்பு காட்டுவதே பக்தி: சக மனிதனிடம் அன்பையும் பொறுமையையும் காட்ட முடியாத பக்தி, வெறும் சடங்குதானே தவிர உண்மையான ஆன்மீகம் அல்ல. கோவிலுக்கு வெளியே நாம் காட்டும் சகிப்புத்தன்மையில்தான் நாம் கும்பிட்ட சாமியின் அருள் வெளிப்பட வேண்டும்.

இந்த அவசரத்தை மாற்ற நாம் என்ன செய்யலாம்?.

பரபரப்பான சூழலிலும் வழிபாட்டிலும், பயணத்திலும் நிதானத்தைக் கொண்டுவர சில எளிய வழிகள்:

வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கலாம்: தினமும் அவசரமாக ஓடுபவர்கள், வாரத்தில் ஒரு நாள் (உதாரணமாக ஞாயிறு அல்லது வெள்ளிக்கிழமை) எந்தவித அவசரமும் இல்லாத ஒரு நேரத்தில் கோவிலுக்குச் செல்லலாம்.

கோவில் பிரகாரத்தில் அமருதல்: சாமியைக் கும்பிட்டவுடன் ஓடிவிடாமல், அங்கிருக்கும் பிரகாரத்தில் குறைந்தது 5 அல்லது 10 நிமிடங்கள் அமைதியாகக் கண்மூடி அமர்வதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளலாம். 

அது உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி, சாலையிலும், பேருந்திலும் நிதானமாகக் கையாள உதவும்.

பக்தி என்பது எந்தவித எதிர்பார்ப்போ அல்லது பயமோ இன்றி, தங்களின் ஆன்மீகத் தேடலுக்காகவும், இறைவனுக்கு நன்றி கூறவும், மன அமைதி பெறவும் மட்டுமே கோவிலுக்குச் செல்வதாகும்.

ஆன்மீகம் என்பதும், கடவுளை உணர்வது என்பதும், ஒரு கடமையோ அல்லது பயந்து செய்யும் காரியமோ அல்ல. அது ஒரு ஆழமான அமைதி அனுபவம். 

வாழ்க்கையின் அவசரங்களைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கோவிலிலும், நமது பயணத்திலும், சக மனிதர்களிடமும் நாம் காட்டும் நிதானமே, நம் மனதில் இருக்கும் பக்தியை வளர்க்கும். 

மனம் நிதானப்படும்போது, இறைத்தன்மையை உணர்வது எளிதாகிறது! ஏனெனில் மனம் தான் எல்லாம்.



உங்களது ஆன்மீக தேடலுக்கான எனது மேலும் சில கட்டுரைகள் 👇

🔗கடவுளை உணரும் வழி.

🔗கடவுளாக மாறும் வழி.

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.