மனித இனம் கடந்து வந்த பாதை: ஜாதி, மதம், இனம், உருவான வரலாறு. மன்னராட்சி, மக்களாட்சி ஒற்றுமைகள்.

மனித இனத்தின் அரசியல் வரலாறு

உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின்படி (Biomass Distribution), ஒரு உயிரினத்தின் உடல் அளவு மற்றும் எடை அதிகமாக இருந்தால், பூமியில் அதன் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்க வேண்டும். 

உதாரணமாக, கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் எறும்புகளோ, பூச்சிகளோ சில மில்லிகிராம் எடையே கொண்டவை. மறுபுறம், டன் கணக்கில் எடையுள்ள யானைகளோ அல்லது திமிங்கிலங்களோ சில லட்சங்கள் என்ற எண்ணிக்கையிலேயே வாழ்கின்றன.

ஆனால், உலகில் சராசரியாக 40 கிலோவிற்கும் அதிக எடையுடன், 800 கோடிக்கும் மேலான பிரம்மாண்ட எண்ணிக்கையில் வாழும் ஒரே ஒரு உயிரினம் மனிதன் மட்டும்தான்! 

இயற்கையின் இந்த சமநிலை விதியை உடைத்து, பூமியின் ஒட்டுமொத்த உயிர்நிறையையும் (Biomass) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பெருமை 'ஹோமோ சேபியன்ஸ்' ஆகிய நமக்கு உண்டு. 

ஆனால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையும் ஆற்றலும் கொண்ட ஒரு இனம், இன்று உலகை நல்வழிப்படுத்துகிறதா என்றால் அது கேள்விக்குறிதான்!

காடுகளிலும் குகைகளிலும் விலங்குகளைப் போல வாழ்ந்த மனித இனம், இன்று விண்வெளியைத் தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. 

இயற்கை தந்த சவால்களையும், காலநிலை மாற்றங்களையும் எதிர்கொண்டு, பூமியை ஆளும் ஒரே இனமாக 'ஹோமோ சேபியன்ஸ்' (Homo sapiens) ஆகிய நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்குக் பின்னால் ஒரு நீண்ட வரலாற்றுப் பயணம் இருக்கிறது. 

ஆனால், அந்தப் பயணத்தை ஆழமாக உற்று நோக்கினால், மனிதன் தன் அறிவால் அடைந்த அறிவியல் வளர்ச்சியை விட, தன் அறியாமையால் வீழ்ந்த சமூக, அரசியல் வீழ்ச்சிகளே அதிகம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

ஒரே இரத்தம், ஒரே குடும்பம்:

உயிரியல் மற்றும் மரபியல் (Genetics) ரீதியாகப் பார்த்தால், இன்று பூமியில் வாழும் 800 கோடிக்கும் அதிகமான மனிதர்களும் ஒருவருக்கொருவர் தொலைதூர உறவினர்களே ஆவர். 

அறிவியல் பூர்வமாக உலகில் உள்ள எந்த இரு மனிதர்களின் டி.என்.ஏ-வை எடுத்து ஒப்பிட்டாலும், அதில் 99.9% மரபணுக்கள் ஒன்றுபோலவே இருக்கும். 

வெறும் 0.1% மாறுபாடுதான் நம் முக அமைப்பையும், உடல் நிறத்தையும் தீர்மானிக்கிறது. 

சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே ஒரு தாயின் (Mitochondrial Eve) பிள்ளைகள்தான் நாம் அனைவரும். 

ஆனால், அறிவியல் பூர்வமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மனித இனம், இன்று ஜாதியாலும் மதத்தாலும் மொழியாலும் பிரிந்து நிற்பது வரலாற்றின் மிகப்பெரிய முரண்பாடு.

பிரிவினையின் தொடக்கம்:

ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மனிதர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பரவியபோது, போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்களுக்குள் தொடர்புகள் அற்றுப்போயின. 

இதனால் தங்களைத் தவிர வேறு மனிதர்களைப் பார்க்கும்போது ஒரு பயமும், "அவர்கள் வேறு, நாம் வேறு" என்ற மனநிலையும் உருவானது. 

இந்த பயத்தின் விளைவாகவே, மனிதர்கள் தங்களுக்குள் செயற்கையான எல்லைகளையும், கடவுள் நம்பிக்கையின் பெயரால் மதங்களையும் உருவாக்கிக் கொண்டனர். 

சமூகங்கள் வளர வளர, மனிதர்கள் செய்யும் தொழில்களின் அடிப்படையில் உருவான பிரிவுகள், காலப்போக்கில் சுயநலம் மற்றும் அதிகாரத்தைக் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பிறப்பின் அடிப்படையிலான 'ஜாதி' அமைப்பாக மாற்றப்பட்டன.

இலவசமாய் கிடைத்த இயற்கை... விலையாய் மாறிய வாழ்க்கை:

ஆதிமனிதனுக்கு இந்த பூமி இலவசமாகவே கிடைத்தது. நிலமும், ஓடும் நீரும், சுவாசிக்கும் காற்றும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. 

ஆனால், மனிதனுக்குள் 'சுயநலம்' என்ற எண்ணம் தலைதூக்கியபோது, பொதுவான நிலத்தைச் சுற்றி வேலி போடப்பட்டது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. 

இயற்கையாகக் கிடைத்த வளங்களைச் சிலர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மற்றவர்களுக்கு விற்கத் தொடங்கினர். 

வாழத் தேவையான அடிப்படைத் தேவைகளான நிலமும் நீரும் காசாக மாறிய கணத்தில், மனிதனின் சுதந்திரம் பறிபோனது. வறுமையும், ஏழை-பணக்காரன் என்ற வர்க்கப் பிரிவினையும் உருவானது.

தகுதியிலிருந்து வாரிசுரிமைக்கு மாறிய சோகம்:

மனிதன் இப்போது இருப்பது போல் அப்போதும் சமமாக அறிவுத்திறன் இருக்கவில்லை.

பயமும், வளங்களுக்கான மோதல்களும் அதிகமானபோது, மக்கள் தங்களைப் பாதுகாக்க "நன்கு அறிவுள்ள, பலமுள்ள" ஒருவனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். 

இந்தத் தேர்வு முழுக்க முழுக்க அவனது தகுதியின் (Merit) அடிப்படையிலேயே இருந்தது. அந்தத் தலைவன் மற்ற குழுக்களைத் தோற்கடித்துப் பேரரசனாக மாறியபோது, மக்கள் அவன் மீது பெரும் மரியாதையும், பயபக்தியும் வைத்தனர்.

இங்குதான் மனித வரலாற்றின் மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்தது. அரசன் தன் அதிகாரத்தையும், சொத்துக்களையும் தன் குடும்பத்திற்குள்ளேயே வைத்திருக்க விரும்பியதால், "அரசனுக்குப் பின் அவனது மகன் தான் அடுத்த அரசன்" என்ற வாரிசுரிமைச் சட்டம் (Hereditary Rule) புகுத்தப்பட்டது. 

வாரிசாக வரும் மகனுக்குத் தகுதி இருக்கிறதா, அறிவு இருக்கிறதா என்று எதையும் பார்க்காமல், "அரசனின் ரத்தம்" என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் அவனுக்கு அடிமையானார்கள். பாதுகாப்புக்காகத் தேடப்பட்ட 'தலைமை', மனிதர்களை அடிமைப்படுத்தும் 'அதிகாரமாக' மாறியது.

மக்களாட்சியிலும் தொடரும் அதே கதை:

மன்னராட்சியை ஒழித்துவிட்டு, தகுதி பார்த்து தலைவனைத் தேர்ந்தெடுக்கும் 'மக்களாட்சி' (Democracy) முறைக்கு மனிதன் மாறினான். 

ஆனால், வடிவங்கள் மாறினாலும் மனிதனின் அடிமை மனநிலையும், அதிகாரக் குவியலும் மாறவே இல்லை. இன்றைய மக்களாட்சியிலும் அதே வாரிசு அரசியல் கதைதான் தொடர்கிறது.

உதாரணமாக, ப்லிப்பைன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகளின் தற்போதைய அரசியல் தலைவர்கள் முன்னாள் அதிபர்களின் நெருங்கிய இரத்த உறவுகள் தான்.

இந்தியாவிலும் பல மாநிலங்களில் வாரிசு அரசியல் தான். குறிப்பாக தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல். இங்குள்ள ஒரு முக்கியக் கட்சி தற்போது நான்காம் தலைமுறையை நோக்கி வாரிசு அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

ஒரு கட்சியின் உச்சகட்ட அதிகாரம், நிதி பலம் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒரே குடும்பத்தின் பிடிக்குள் முடக்கப்படும்போது, தகுதியான பிற தலைவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். 

மன்னர்கள் காலத்தில் வாள் முனையில் கைமாறிய அதிகாரம், இன்று தேர்தல் வாக்குகள் மூலம் கைமாறுகிறது, அவ்வளவே! 

மக்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தினாலும், மறைமுகமாக அதே வாரிசு அரசியல் முறைக்குத்தான் மீண்டும் மீண்டும் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கீழ் மட்டத்திலிருந்து யாரும் தலைவன் ஆக முடியாததால், மக்கள் படும் இன்னல்களை தலைவர்களின் வாரிசுகளால் உணர முடியாமல் போகின்றது.

இப்போது மது, பொழுதுபோக்கு என்று மனித மனம் ஆசைப்படுவதால் தலைவனாகும் தகுதியும் மக்களுக்கு இல்லாமல் போகின்றது.

குரங்கிலிருந்து மனிதனாக மாறிய மனிதன், இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவரை சுதந்திரமாக இருந்தான். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஜாதி, மதம், பணம், என்ற தடைகளைத் தனக்குத்தானே போட்டுக் கொண்டு தலைவனாகும் தகுதியை இழந்து விட்டான்.

அறிவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உண்மையை உணர்ந்து, வெளிப்புற அடையாளங்களையும், வாரிசு அரசியல் அடிமைத்தனத்தையும் கடந்து, மனதை கட்டுப்படுத்தி அனைவரும் தலைவனாகும் தகுதியை வளர்த்துக் கொண்டால் தான் உண்மையான, தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுக்கவாவது முடியும்.

அப்போது தான் மனித இனம் கடந்து வந்த பாதை முழுமையடையும்!

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.