மாயா...மாயா...எல்லாம் மாயா! மனதின் மயக்கமும் உண்மையும்!
"மாயா மாயா எல்லாம் மாயா...
சாயா சாயா எல்லாம் சாயா..."
ஒரு திரைப்படப் பாடலின் இந்த வரிகளை நாம் தற்செயலாகக் கடந்து போகும்போது ஏதோ சாதாரணத் தத்துவப் பாடல் என்று நினைத்திருப்போம்.
ஆனால், இதன் பின்னால் இருக்கும் உண்மை மிக ஆழமானது. இந்த உலகத்தில் நாம் எதைக் காண்கிறோமோ, எதை உணர்கிறோமோ, எதன் பின்னால் ஓடுகிறோமோ... அவை அத்தனையுமே ஒரு பெருங்கனவு. ஆம், எல்லாமே மாயை!
மாயை என்றால் என்ன? (What is Maya?):
எளிமையாகச் சொன்னால், இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றுவதுதான் மாயை.
உதாரணமாக, இருட்டில் கிடக்கும் ஒரு கயிற்றைப் பார்த்துவிட்டு, அது பாம்பு என்று பயந்து நடுங்குகிறோம் அல்லவா? அங்கே பாம்பு இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால், நம்முடைய அறியாமை கலந்த கண்கள் அதை பாம்பு என்று நம்மை நம்ப வைக்கிறது. அந்த இருட்டு விலகி, கையில் வெளிச்சம் (விளக்கு) வரும்போதுதான் தெரிகிறது அது வெறும் கயிறு என்று!
அதேபோலத்தான் இந்த மனித வாழ்க்கையும். நாம் வாழ்கின்ற இந்த பூமி, நமக்கு ஒளியைத் தரும் சூரியன், விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் கூட நிரந்தரமில்லை; ஒருநாள் அழியக்கூடியவைதான்.
அப்படி இருக்கையில், தற்காலிகமான இந்த உலகத்தையும், ஒருநாள் சாம்பலாகப் போகும் இந்த உடலையும், நொடிக் கொருமுறை மாறிக்கொண்டே இருக்கும் இந்த மனதையும் "நிரந்தரம்" என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த அறியாமைக்குக் பெயர்தான் மாயை.
இவ்வளவு பணம் இருந்தால் தான் சந்தோஷமா?
"இன்னும் கொஞ்சம் பணம் இருந்தால் என் கவலைகள் எல்லாம் தீர்ந்துவிடும்... அந்த ஆடம்பரப் பொருள் மட்டும் கைக்கு வந்துவிட்டால் நான் உலகிலேயே சந்தோஷமான மனிதனாகி விடுவேன்..." என்று நம்மில் எத்தனை பேர் தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?
உண்மை என்னவென்றால், "இவ்வளவு பொருள் அல்லது இவ்வளவு பணம் இருந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும்" என்று நம் மனம் நம்புவதே ஒரு மிகப்பெரிய மாயை தான்!
பணம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு தற்காலிகக் கருவி மட்டுமே, அதுவே வாழ்க்கை அல்ல. நிலையற்ற ஒரு பொருளின் மீது நாம் கட்டமைக்கும் சந்தோஷமும் நிலையற்றதாகவே அழியும்.
பேராசையும் ஈகை குணம் மறைதலும்:
இந்த மாயையின் ஆபத்தான மறுபக்கம் என்ன தெரியுமா? நிறைய பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து நாம் பணத்தைச் சேர்த்து வைக்கத் தொடங்கும்போது, நம் மனதை அறியாமையும் பயமும் தொற்றிக்கொள்கிறது.
அந்தப் பேராசையின் உச்சகட்டத்தில், நமக்கு மிக நெருக்கமானவர்களோ அல்லது வறுமையில் வாடும் பிறரோ நம்மிடம் வந்து உதவி என்று கேட்டால் கூட, அவர்களுக்கு உதவி செய்ய நம் மனம் வராது!
"கொடுத்தால் குறைந்துவிடுமோ, நம்முடைய சந்தோஷத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ" என்ற தற்காப்பு உணர்வை (Insecurity) இந்த மாயை நமக்குள்ளே விதைத்துவிடுகிறது.
பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் பேரானந்தத்தை இந்த மனப் பேராசை முற்றிலுமாக அழித்துவிடுகிறது.
பணத்தின் காவலாளியாகும் கஞ்சத்தனம்:
உதவி செய்ய மனம் வராது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்த மாயையின் உச்சகட்ட கொடுமை என்ன தெரியுமா?
பணத்தின் மீது பற்று வைக்கும் ஒரு மனிதன், இறுதியில் இவ்வளவு ஏன்... தன்னுடைய சொந்தச் செலவுக்குக் கூட எடுத்துச் செலவழிக்கத் துணியாமல் ஒரு ஆகச்சிறந்த கஞ்சனாகி விடுகிறான்!
நல்ல உணவு, உடலுக்குத் தேவையான மருத்துவம், தனக்கான சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் என எதற்குமே அவனுக்குப் பணம் எடுக்க மனம் வராது.
"பணம் குறைந்தால் நிம்மதி போய்விடும்" என்ற மாயை அவனைப் பணத்தின் எஜமானனாக வாழ விடாமல், அதை வெறும் காவல் காக்கும் ஒரு அடிமையாக மாற்றி விடுகிறது.
தேனீக்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த தேன் அதற்குப் பயன்படாமல் போவதைப் போல, அவன் சேர்த்த பணமும் அவனுக்குப் பயன்படாமலேயே போய்விடுகிறது.
அவரின் கஞ்சத்தனத்தால் தனக்கும் பிரயோஜனம் இல்லை, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பிரயோஜனம் இல்லை.
குழந்தையின் பிடிவாதமே மனம்!:
நம் மனதின் இந்த மாயை சுபாவத்தைப் புரிந்து கொள்ள ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.
கடையில் ஒரு பொம்மையைப் பார்த்துவிட்டு ஒரு சிறு குழந்தை பிடிவாதம் பிடிக்கிறது. அது வேண்டும் என்று மணிக்கணக்காக அழுது அடம் பிடிக்கிறது.
பெற்றோரும் வேறு வழியின்றி அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால், வாங்கி கொடுத்த ஐந்தாவது நிமிடம் என்ன நடக்கிறது? அந்தப் பொம்மையை எங்கோ ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு, குழந்தை அதை மறந்தே போகிறது!
அந்தக் குழந்தைதான் நம் மனம்:
பெரியவர்களாகிய நாமும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
சைக்கிள் வைத்திருக்கின்ற மனதிற்கு பைக் ஆசை வரும்; பைக் கிடைத்தவுடன் கார், கார் கிடைத்தவுடன் பெரிய வீடு என இந்த ஓட்டத்திற்கு முடிவே இருக்காது.
மணிக்கணக்காக அழுத குழந்தையைப் போல, வருடக் கணக்காக ஒரு பொருளுக்காக உழைக்கிறோம், ஆனால் கிடைத்த சில நாட்களிலேயே மனம் அதை சலித்துக்கொண்டு அடுத்த ஆசையை நோக்கி ஓடுகிறது.
நிஜமான மகிழ்ச்சி எங்கே உள்ளது?:
ஒரு பொருளை அடையும் போது கிடைக்கும் மகிழ்ச்சி உண்மையில் அந்தப் பொருளில் இல்லை.
அதை அடைந்தவுடன் "அப்பாடா" என அந்த ஒரு வினாடி நம் மனம் ஆசைகளின்றி அடங்குகிறதே, அந்த அமைதியில்தான் இருக்கிறது.
ஆனால், மனம் அதை உணராமல், மகிழ்ச்சி அந்தப் பொருளில் தான் இருந்தது என்று தவறாக நம்பி, மீண்டும் அடுத்த பொருளை நோக்கி ஓடத் தொடங்குகிறது.
கடலில் அலைகள் தோன்றி மறைவதைப் போல, உலகப் பொருட்களும், செல்வமும் தோன்றி மறையக்கூடியவை. இதை உணர்வதுதான் ஞானத்தின் தொடக்கம்.
மாயையை வெல்வது எப்படி?:
நம்மிடம் இருக்கும் உலகியல் வசதிகளை நாம் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்வோம், ஆனால் அவைதான் நம் சந்தோஷத்தைத் தீர்மானிக்கின்றன என்ற மாயைக்குள் சிக்காமல் இருப்போம்.
கடலில் படகு மிதக்கலாம், ஆனால் படகுக்குள் கடல் நீர் புகுந்துவிடக் கூடாது; புகுந்தால் படகு மூழ்கிவிடும். அதுபோல, உலகத்தில் நாம் வாழலாம், ஆனால் நமக்குள்ளே உலகியல் மாயை புகுந்துவிடக் கூடாது.
மனம் என்னும் குழந்தையின் பிடிவாதத்திற்குப் பின்னால் ஓடாமல், ஒரு சாட்சியாக நின்று அதன் விளையாட்டைக் கவனிப்போம்.
அறியாமை என்ற இருள் விலகி, ஞானம் என்ற வெளிச்சம் வரும்போது மாயையின் திரை கிழிந்துவிடும். நமக்குள்ளே இருக்கும் வற்றாத பேரமைதியை நாம் காணலாம்!
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

Comments
Post a Comment