மனதை வேலைக்காரனாக்கு, அறிவை முதலாளியாக்கு: இந்த உலகை சொர்க்கமாக்கும் ரகசியம்!
"மனதை வேலைக்காரனாக்கு, அறிவை முதலாளியாக்கு" என்ற தத்துவம், நம்மை நாமே ஆளும் உன்னதமான கலைக்கு வழிகாட்டுகிறது.
மனதின் போக்கிற்கு அடிமையாகாமல், அறிவின் வழிகாட்டுதலில் வாழும் போதே ஒரு மனிதன் முழுமையடைகிறான்; அவன் வாழும் சமூகமும் சொர்க்கமாக மாறுகிறது.
மனதின் இயல்பு: அது ஏன் ஒரு மோசமான எஜமான்?
மனம் என்பது ஒரு விசித்திரமான கருவி. அது எப்போதும் தற்காலிக இன்பங்கள், ஆசைகள் மற்றும் சோம்பேறித்தனத்தின் பின்னால் ஓடக்கூடியது.
மனதின் முக்கிய பலவீனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
உடலைச் சோம்பேறியாக்குதல்: உடலை உழைக்கவிடாமல் தடுத்து, தற்காலிகப் பாதுகாப்பையும் சோம்பலையும் தேடுவது மனதின் இயல்பு. கடினமான வேலைகளைத் தள்ளிப்போட (Procrastination) அது பல சாக்குப்போக்குகளைக் கண்டறியும்.
சுயநலப் போக்கு: மனம் அடிப்படையில் சுயநலம் மிக்கது. தன் சொந்த லாபத்தையும் தற்காலிக மகிழ்ச்சியையும் மட்டுமே அது பார்க்கும். தனது முடிவுகளால் மற்றவர்கள் பாதிப்படைவார்களா அல்லது காயப்படுவார்களா என்று யோசிக்கும் முதிர்ச்சி மனதிற்கு இல்லை.
கணக்குப் பார்க்கும் பிடிவாதம் (Ego): உறவினர்கள், நண்பர்களிடம் நாம் காட்டும் பிடிவாதம் இறுதியில் உறவுகள் முறிவதற்கு காரணமாகிறது.
"அவன் எனக்கு நல்லது (விஷேசத்திற்கு வரவில்லை) செய்யவில்லை, அதனால் நானும் அவனுக்குச் செய்ய மாட்டேன்" என்று பிடிவாதம் பிடிப்பதும், வணிக ரீதியாக கணக்குப் பார்ப்பதும் மனித மனதின் இயல்பு.
அவர்கள் வரமுடியாமல் அல்லது உதவ முடியாமல் போனதுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று மனம் நினைக்காது.
அதனால் அவன் எனக்கு செய்யவில்லை நானும் செய்யமாட்டேன் என்று மனம் முடிவு செய்து விடும்.
மனம் ஏன் ஒரு நல்ல வேலைக்காரன்?.
எதாவது ஒரு வேலையை செய்யும் போது, "இதை நம்மால் செய்ய முடியாது" என்று மனம் நினைத்துவிட்டால், அந்த வேலையைச் செய்ய முடியாமல் போவதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து, மூளையை நம்ப வைத்துவிடும்.
ஆனால், "என்னால் முடியும்" என்று மனம் நினைத்துவிட்டால், பசி, தூக்கம் என்ற உணர்வைக் கூட மூளைக்கு அனுப்பாமல் அடிமையைப் போல உழைத்து அந்த வேலையை முடித்துத் தரும்.
எனவேதான் முன்னோர்கள், "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்றும் "மனம் ஒரு நல்ல வேலைக்காரன், ஆனால் மோசமான எஜமான்" என்றும் கூறினார்கள்.
அறிவின் முக்கியத்துவம்: ஏன் அறிவை முதலாளியாக்க வேண்டும்?.
அறிவு என்பது தூரநோக்குச் சிந்தனை மற்றும் பகுத்தறிவு கொண்டது.
எது சரி, எது தவறு, எது நீண்ட காலத்திற்கு நல்லது என்று ஆராயும் திறன் அறிவிற்கே உண்டு.
மனம் சுயநலமாகத் தீங்கிழைக்க நினைக்கும் போது அல்லது பிடிவாதம் பிடிக்கும் போது, அறிவு அங்கே முதலாளியாக நின்று வழிகாட்ட வேண்டும்.
அடுத்தவன் செய்யவில்லை என்பதற்காக நாமும் செய்யாமல் போனால், அவனுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அறிவு நமக்கு உணர்த்தும்.
நம்முடைய சொந்த குண நலன்களுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் பிரதிபலன் பாராமல் நல்லது செய்வதே அறிவின் வழிநடத்துதலாகும்.
வள்ளுவர் காட்டிய 'சொர்க்கம்': அடுத்தவர் செய்யாவிட்டாலும் நாம் செய்வோம்!.
"எல்லாரும் தனக்குக் கிடைத்ததை மட்டுமே திருப்பித் தருவேன்" என்று கணக்குப் பார்த்து வாழ்ந்தால் இந்த உலகம் எப்படி சொர்க்கமாக மாறும்?
அடுத்தவர் செய்யவில்லை என்றாலும், நமக்குத் தீமையே செய்திருந்தாலும் நாம் நன்மையே செய்ய வேண்டும் என்ற உன்னதப் பண்பை தெய்வப்புலவர் திருவள்ளுவர் அழகாகக் கூறுகிறார்:
"இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்" (குறள்: 314)
நமக்குப் பிடிவாதமாக நன்மை செய்யாதவர் அல்லது துன்பம் செய்தவர் கூடத் தன் செயலை நினைத்து வெட்கப்படும்படி, அவருக்கு நன்மையைச் செய்வதுதான் அறிவின் உச்சக்கட்ட முதிர்ச்சி.
இத்தகைய மனிதர்கள் வாழும் போதுதான் இந்த பூமி உண்மையான சொர்க்கமாக மாறுகிறது. அடுத்தவர்களின் குணத்திற்காக நம்முடைய நல்ல குணத்தை நாம் ஒருபோதும் மாற்றிக்கொள்ளக் கூடாது.
மனதை அடக்கி, அறிவை முதலாளியாக்கும் எளிய உத்திகள்:
வலைப்பதிவை வாசிக்கும் உங்களுக்காக, சோம்பேறித்தனத்தையும் மனதின் சுயநலத்தையும் முறியடிக்கச் சில எளிய நடைமுறை உத்திகள்:
5-செகண்ட் விதி: ஒரு நல்ல காரியத்தையோ அல்லது கடமையையோ செய்ய அறிவு கட்டளையிட்டதும், மனம் சாக்குப்போக்கு யோசிப்பதற்குள் 5, 4, 3, 2, 1 என எண்ணி உடனடியாகச் செயலில் இறங்கிவிட வேண்டும்.
2-நிமிட விதி: பெரிய இலக்குகளைக் கண்டு மனம் பயந்து சோம்பேறித்தனம் கொள்ளும்போது, "வெறும் 2 நிமிடம் மட்டும் இந்த வேலையைச் செய்வோம்" என்று மனதை ஏமாற்றித் தொடங்க வேண்டும்.
இவ்வாறு நம் மனதை ஏமாற்றி வேலையைத் தொடங்கும்போது, நம் மூளை அந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி, வேலையை முடித்துவிடும்.
சுற்றுப்புறத்தை மாற்றுதல் (Environment Design): சோம்பேறித்தனம் படுவதற்கான வாய்ப்புகளைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து குறைத்துவிட வேண்டும். (உதாரணமாக: படிக்கும்போது மொபைல் போனைத் தள்ளி வைத்தல், எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களின் பேச்சைக் கேட்டாலும் அறிவுக்கு கொண்டு செல்லாமல் இருப்பது).
மாற்றி யோசித்தல் (Empathy): எந்தவொரு முடிவை எடுக்கும் முன்பும், அடுத்தவர்களின் நிலையிலிருந்து சிந்திக்கும் பக்குவத்தையும் மனிதநேயத்தையும் அறிவின் மூலம் பழக வேண்டும்.
"இதேபோல் அடுத்தவர் நமக்கு செய்தால் நாம் எப்படி உணர்வோம்" என்று சிந்தித்து ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.
நானும் பாட்ஷா படத்தில் வரும் ஒரு ரஜினி வசனத்தை கைதட்டி ரசித்தவன் தான் ஆனால் அது 90% தவறான வழிகாட்டல் என்று பிறகு தான் தெரிந்தது. மீதம் 10% தான் நமக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம்.
அந்த வசனம் "நான் இத கேட்டு (அறிவு) வேலை செய்ய மாட்டேன், இத கேட்டு தான் (மனம்) வேலை செய்வேன்.
அறிவு காட்டும் சரியான பாதையில், மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வைப்பதே இந்தத் தத்துவத்தின் சாரசம்சமாகும்.
மனதின் தற்காலிக ஆசைகளுக்கும், ஈகோவிற்கும் அடிமையாகாமல், அறிவின் எச்சரிக்கையையும் வள்ளுவர் காட்டிய நெறியையும் ஏற்று வாழ்ந்தால், வாழ்வில் வெற்றியும், சமூகத்தில் அமைதியும், நம் அகத்தில் நிரந்தர நிம்மதியும் கிடைப்பது உறுதி.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

Comments
Post a Comment