பங்குச்சந்தையில் வெற்றி பெறும் பெரும் வழி.

பங்குச்சந்தையில் வெற்றி பெற.

"பங்குச்சந்தையில் பணம் போட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம்" என்ற தவறான ஆசை வார்த்தைகளை நம்பி, தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்த பலரை நாம் இன்று பார்க்கிறோம். 

பங்குச்சந்தை என்பது பேராசையில் ஒரே நாளில் பணம் சம்பாதிக்கும் சூதாட்டம் அல்ல; அது பொறுமையோடு ஒரு உயிரை வளர்க்கும் கலை என்பதைப் புரிய வைக்கவே இப்பதிவு.

இன்று எல்லாரும் மார்க்கெட்டைப் பார்த்து "ஏன் ஏறவில்லை? ஏன் ஏறவில்லை?" என்று பதறுகிறார்கள். பிறந்த குழந்தையைப் பார்த்து "ஏன் இன்னும் நடக்கவில்லை? ஏன் நடக்கவில்லை?" என்று கேட்பது போலத்தான் இது இருக்கிறது.

👶 வளர்ச்சிக்குத் தேவை பொறுமை.

குழந்தை பிறக்கும், புரளும், தவழும், உட்காரும், நிற்கும், விழும், மீண்டும் நிற்கும்; அதன் பிறகுதான் நடக்கும். அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும். தட்டி விழாமல் நடப்பதே நல்லது என்று அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். மார்க்கெட்டும் அப்படித்தான்.

நீங்கள் வாங்கிய தரமான பங்கு இன்று ஏறவில்லை என்றால், அது முடங்கிவிடவில்லை. அது இப்போது தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை கீழே விழுந்தால் அது தோல்வி அல்ல; அடுத்த முறை இன்னும் உயரமாக எழுந்து நிற்பதற்கான ஒரு சிறிய சறுக்கல் மட்டுமே.

🍼 நடக்கவில்லை என்று உணவு தராமல் விட்டுவிடுவோமா? (Averaging தத்துவம்):

குழந்தை இன்னும் நடக்கவில்லை என்பதற்காக, அதற்கு நாம் உணவு தராமல் பட்டினி போட்டுவிடுவோமா என்ன? மாறாக, அது இன்னும் பலம் பெற்று நடக்க வேண்டும் என்று கூடுதல் ஊட்டச்சத்துள்ள உணவைத்தானே கொடுப்போம்?

முதலீடும் அப்படித்தான். நீங்கள் வாங்கிய ஒரு தரமான பங்கு இன்னும் வளரவில்லை அல்லது சற்று சரிந்துவிட்டது என்பதற்காக அதை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது. அது இன்னும் பலமாக எழுந்து நிற்க, 'ஆவரேஜ்' (Average) எனும் கூடுதல் முதலீட்டு உணவை அதற்கு ஊட்ட வேண்டும்.

🚫 பிற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யாதீர்கள்:

பக்கத்து வீட்டு குழந்தை ஒரு வயதிலேயே நடக்கத் தொடங்கிவிட்டது என்பதற்காக, நம் குழந்தையையும் அதே வேகத்தில் நடக்கச் சொல்லி வற்புறுத்த முடியுமா? ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அதேபோல்தான் பங்குகளும்.

மற்றவர்கள் வாங்கிய பங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகிவிட்டது என்பதற்காக, நீங்கள் வாங்கிய தரமான பங்கை அவசரப்பட்டு நஷ்டத்தில் விற்றுவிடாதீர்கள். அதற்கான காலம் வரும்போது அதுவும் ஓடும்.

🍏 தரமான ஊட்டச்சத்து மட்டுமே அவசியம்:

ஆனால், குழந்தைக்குக் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கண்ட கண்ட துரித உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடும்.

முதலீடும் அப்படித்தான். அவசர லாபத்திற்காகத் தரம் குறைந்த பங்குகளில் (Penny Stocks) முதலீடு செய்துவிட்டு, அதற்கு 'ஆவரேஜ்' என்ற பெயரில் மேலும் மேலும் பணத்தை வீணடிப்பது மூடத்தனம். தரமான நிறுவனங்கள் என்ற ஊட்டச்சத்தை மட்டுமே உங்கள் போர்ட்ஃபோலியோவுக்குக் (Portfolio) கொடுக்க வேண்டும். 

எப்படி தரமான நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இணையத்தில் தேடினால் அறிவுரை சொல்ல நிறைய வழிகாட்டிகள் (அரசு அனுமதியுடன்) உள்ளனர்.

🏛️ அம்பானியும் அதானியும் ஏன் கஷ்டப்பட வேண்டும்?:

"பங்குச்சந்தையில் உடனே, மிக எளிதாகப் பணம் சம்பாதிக்க முடியும்" என்பது உண்மையானால், உலகப் பணக்காரர்களான அம்பானியும் அதானியும் ஏன் இன்னும் தினமும் கஷ்டப்பட்டுத் தொழில் செய்ய வேண்டும்? ஏன் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்?

அவர்கள் நினைத்தால் தங்களின் பங்குகளை விற்றுவிட்டுப் பணத்தோடு நிம்மதியாக உட்கார முடியுமே? ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. ஏனெனில், நிஜமான உழைப்பும், உற்பத்தியும், கால அவகாசமும் இல்லாமல் எதிலும் உண்மையான செல்வம் சாத்தியமில்லை.

💊 சத்து மருந்து vs மாயாஜாலம்:

உண்மையில் பங்குச்சந்தை என்பது உங்கள் பணம் (குழந்தை) கொஞ்சம் பலமானவராக  வளரக் கொடுக்கும் ஒரு சத்து மருந்து தானே தவிர, ஒரே நாளில் குழந்தை வளர்ந்து, வேலைக்குச் சென்று, நம்மை உட்கார வைத்துச் சோறு போடாது!

📺 ஊடகப் பரபரப்பைத் தவிர்ப்பதே அமைதி வழி:

முக்கியமாக, நியூஸ் சேனல்களில் வரும் பரபரப்பான முதலீட்டுச் செய்திகளைப் பார்க்காமல் இருந்தாலே நம் மனம் அமைதிப்படும். அவர்கள் காட்டும் தினசரி ஏற்ற இறக்கப் பதற்றங்கள் நம் முடிவுகளைத் தப்பாக்கிவிடும். அமைதியான மனமே சிறந்த போர்ட்ஃபோலியோவை உருவாக்கும்

உங்கள் போர்ட்ஃபோலியோ என்பது ஒரு குழந்தை; நீங்கள் அதன் பெற்றோர். தினம் தினம் அதைத் திட்டினால் அது வேகமாக வளராது.

உன் முதலீடு உன் கையில். ஆனால் அதன் வளர்ச்சி காலத்தின் கையில்.

ஆகவே, மனம் தான் எல்லாம். மனதை கட்டுப்படுத்தி பங்கு சந்தையில் வெற்றி பெற வாழ்த்துகள்!

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.