வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி.

வாழ்க்கையில் வெற்றி பெற.


வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி: உங்கள் உணர்வுகள் உங்களை ஏமாற்றுகிறதா?

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களின் திறமையின்மையால் தோற்பதில்லை; மாறாக, சரியான நேரத்தில் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் தான் தோற்றுப் போகிறார்கள். 

நாம் ஒரு இலக்கை நோக்கி ஓடும்போதோ அல்லது ஒரு பிரச்சனைக்குத் தீர்வு தேடும்போதோ, நம் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஒரு உன்னதமான வாழ்வியல் கதையை இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ஊரில் ஒரு விசித்திரமான போட்டி வைக்கப்பட்டது. போட்டி மிகவும் எளிமையானது போலத் தோன்றியது. போட்டியாளர்களுக்கு 100 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் வழங்கப்படும். அந்தப் புத்தகத்தில் "தங்கம்" என்ற வார்த்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். சரியாகக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேடுதல் வேட்டை ஒரு தனி அறையில், ஒவ்வொரு நபராக அழைத்து நடத்தப்பட்டது. போட்டிக்கு வந்த நான்கு நபர்களின் மனநிலை நமக்கு ஒரு பெரிய வாழ்க்கை பாடத்தைக் கற்றுத் தருகிறது.

பேராசையும் அவசரமும் (முதல் போட்டியாளர்).

முதல் நபர் அறைக்குள் நுழைந்தான். அவனிடம், "10 நிமிடத்தில் கண்டுபிடித்தால் ஒரு கிலோ தங்கம் உனக்கு சொந்தம்!" என்றார்கள். "ஒரு கிலோ தங்கமா!" என்று கேட்டதும் அவனுக்குள் பேராசை அலைமோதியது.

பரிசை உடனே வெல்ல வேண்டும் என்ற அவசரத்தில், புத்தகத்தின் பக்கங்களை வேகவேகமாகப் புரட்டினான். கால அவகாசம் முடிந்துவிடுமோ என்ற பதற்றம் அவனது பார்வையை மழுங்கடித்தது. ஆசையும் அவசரமும் அவன் கண்ணை மறைத்ததால், அவனால் அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தோல்வியடைந்தான்.

வாழ்வியல் பாடம்: பேராசையும், அவசரமும் இருக்கும் இடத்தில் நிதானம் இருக்காது. நிதானம் இல்லாதபோது நம் கண் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் கூட நமக்குத் தெரிவதில்லை.

பயமும் பதற்றமும் (இரண்டாவது போட்டியாளர்).

இரண்டாவது நபர் வந்தான். அவனிடம் போட்டி அமைப்பாளர்கள், "கொடுக்கப்படும் 10 நிமிடத்தில் நீ கண்டுபிடிக்கவில்லை என்றால், உன்னுடைய விரலை வெட்டி விடுவோம்!" என்று மிரட்டினார்கள்.

இதைக் கேட்டதும் அவனுக்குள்  பயம் வந்துவிட்டது. பயத்தில் அவனது கைகளும் கால்களும் நடுங்கின. பக்கங்களை ஒழுங்காகப் படிக்காமல், பயத்தின் காரணமாக ஒரு பக்கத்தை விட்டுவிட்டு இன்னொரு பக்கத்தைப் புரட்டினான். பயம் அவனது சிந்திக்கும் திறனை முடக்கியதால், அவனும் போட்டியில் தோற்றுப் போனான்.

வாழ்வியல் பாடம்: "தோற்றுவிடுவோமோ" என்ற பயம் நம்மிடம் இருக்கும் திறமையைக் கூடச் சரியாகப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிடும்.


கோபமும் ஈகோவும் (மூன்றாவது போட்டியாளர்).

மூன்றாவது நபர் உள்ளே வந்தான். அவனிடம், "உன்னால் எல்லாம் இந்த வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியாது. நீ ஒரு தகுதியற்றவன், ஒரு தோல்வியாளன்!" என்று கூறி அவரை அவமானப்படுத்தினார்கள்.

இதைக் கேட்டதும் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. "என்னை எப்படிப் பார்த்து அப்படிச் சொல்லலாம்? நான் யார் என்று காட்டுகிறேன்!" என்ற ஈகோவோடு புத்தகத்தைக் கையில் எடுத்தான். அதே 10 நிமிட அவகாசம். ஆனால், கோபத்தின் வேகத்தில் புத்தகத்தின் பக்கங்களை அசுர வேகத்தில் திருப்பினான். கோபம் அவனது அறிவை மறைத்ததால், அவனாலும் இலக்கை அடைய முடியவில்லை.

வாழ்வியல் பாடம்: மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கோபத்திலும், ஈகோவிலும் செயல்பட்டால், நம் ஆற்றல் வீணாகுமே தவிர நமக்கு வெற்றி கிடைக்காது.

அமைதியும் நிதானமும் (நான்காவது போட்டியாளர் - வெற்றியாளர்):

கடைசியாக நான்காவது நபர் வந்தான். அவனிடம் சொன்னார்கள், "நண்பா, உனக்கு நேரக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள். நிதானமாகத் தேடு."

அவன் மனதில் பேராசை இல்லை, விரலை வெட்டிவிடுவார்களோ என்ற பயம் இல்லை, அவமானப்படுத்திய கோபம் இல்லை, எதையும் உடனே முடிக்க வேண்டும் என்ற அவசரமும் இல்லை.

அவன் செய்த செயல் மிகவும் விசித்திரமானது. அவன் புத்தகத்தை அவசரமாகத் திறக்கவே இல்லை. முதலில் அந்தப் புத்தகத்தை வெளிப்புறமாக முழுவதுமாகப் பார்த்தான். பின் அதன் அட்டையைத் திருப்பிப் பார்த்தான். அங்கே மிகச் சிறிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது: "தங்கம் பதிப்பகம்"!

அவன் புத்தகத்தின் உள்ளே தேடாமல், வெளிப்புறத்தை நிதானமாகக் கவனித்ததால் ஒரே நிமிடத்தில் வெற்றி பெற்றான்!

நம் அன்றாட வாழ்க்கையுடன் ஒரு ஒப்பீடு.

இந்தக் கதை ஏதோ புத்தகப் போட்டி பற்றியது மட்டுமல்ல, இதுதான் நம்முடைய அன்றாட வாழ்க்கையும் கூட.

உதாரணமாக, நம் வீட்டில் ஒரு பொருளை அவசரமாகவோ அல்லது கோபமாகவோ தேடுவோம். வீடு முழுக்கத் தலைகீழாகத் தேடினாலும் அந்தப் பொருள் நமக்குக் கிடைக்காது. ஆனால், சிறிது நேரத்தில் நம் அம்மா சாதாரணமாக வந்து, "உன் கண் முன்னாடி தானே இருக்கிறது!" என்று அதை எடுத்துக் கொடுப்பார்கள். அப்போது நாம் தலையைச் சொறிந்து கொண்டு நிற்போம்.

பொருள் எப்போதும் அங்கேதான் இருந்தது. ஆனால், நம் மனதில் இருந்த அவசரமும் கோபமும் அந்தப் பொருளை நம் கண்களுக்குக் காட்டாமல் மறைத்துவிட்டது.

வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முன்பும், ஆசை, கோபம், பயம், அவசரம் ஆகிய இந்த நான்கு எதிர்மறை உணர்வுகளையும் கொஞ்சம் ஓரமாக எடுத்து வைத்துவிட்டுப் பாருங்கள். மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கும்போது, மிகக் கடினமான சிக்கல்களுக்கும் மிக எளிமையான தீர்வுகள் உங்கள் கண் முன்னால் தோன்றும்.

மனதைக் கட்டுப்படுத்துங்கள், தெளிவான பாதையைத் தேர்ந்தெடுங்கள்... "நீங்களும் வெற்றியாளர் தான்!"

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.