பிள்ளைகளை சிறந்தவர்களாக மாற்றுவது எப்படி?
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை: பிள்ளைகளுக்கு வெறும் கட்டளை மட்டும் போடுவது தீர்வாகுமா?
"மகன் எப்படி ஒழுக்கமாகவும் கட்டுப்பாடோடும் வாழ வேண்டும் என்று ஒரு தந்தை நினைக்கிறாரோ, முதலில் அந்தத் தந்தை அவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும்." இது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உன்னத தத்துவம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் — பிள்ளைகளின் மொபைல் போன் (Mobile Phone) பயன்பாடு. ஆனால், நாம் நாள் முழுவதும் மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டே, பிள்ளைகளைப் பார்த்து "போன் பார்க்கக் கூடாது" என்று வெறும் கட்டளை மட்டும் இடுவதால் எந்தப் பயனும் இல்லை.
ஒரு தந்தையின் பாடம்:
ஒரு கிராமத்தில் மாறன் என்றொரு நடுத்தர வயது மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அறிவுமதி என்ற பத்து வயது மகன் இருந்தான். மாறனுக்கு ஒரு தீய பழக்கம் இருந்தது — அதுதான் குடிப்பழக்கம். அதோடு, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் யாரிடமும் பேசாமல் எப்போதும் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடப்பார்.
அறிவுமதி பள்ளியில் மிகச் சிறப்பாகப் படிக்கும் மாணவன். ஒருநாள், மாறன் தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிப் பேச நினைத்தார். மகனை அருகில் அழைத்து, "தம்பி, நீ வாழ்க்கையில பெரிய ஆளா வரணும். எப்போதும் ஒழுக்கமா, கட்டுப்பாடா இருக்கணும். எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகிடக் கூடாது. எப்போதும் போன் பார்த்துகிட்டே இருக்கக் கூடாது, ஒழுங்கா படி" என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார்.
அப்போது அந்தச் சிறுவன் தன் தந்தையின் கண்களை நேராகப் பார்த்து, "அப்பா, நீங்க தினமும் குடிக்கிறீங்களே... அதுமட்டும் இல்லாம வீட்டுக்கு வந்தா எப்போதும் போனேதானே பார்த்துட்டு இருக்கீங்க? நீங்க செய்யறதை நான் செய்யக் கூடாதுன்னு கட்டளை மட்டும் போட்டா நான் எப்படிப்பா கேட்க முடியும்?" என்று மிக மழலையாகக் கேட்டான்.
பிள்ளையின் வாயிலிருந்து வந்த இந்த நியாயமான கேள்வி மாறனின் நெஞ்சில் சாட்டையாக அடித்தன. தன் மகனுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் தனக்கு, அதைச் செய்ய தார்மீக உரிமை இல்லை என்பதை உணர்ந்தார். வெறும் கட்டளைகள் பிள்ளைகளை மாற்றாது, நம்முடைய செயல்பாடுகளே மாற்றும் என்பதைப் புரிந்துகொண்டார்.
அன்று முதல் தன் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டதோடு, வீட்டிற்குள் நுழைந்ததும் மொபைல் போனை ஒருபுறம் ஒதுக்கி வைத்தார். தன் தந்தை மாறியதைக் கண்ட அறிவுமதி, போன் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடான, ஒழுக்கமான மனிதனாக வளர்ந்து பெரிய சாதனையாளராக மாறினான்.
வெறும் கட்டளைகள் ஏன் பலன் தருவதில்லை?
போலித்தனம் (Hypocrisy) பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை
நாம் ஒரு செயலைச் செய்துகொண்டே, பிள்ளைகளை அதைச் செய்யாதே என்று கூறும்போது அவர்கள் நம்மை ஒரு 'போலி வழிகாட்டியாகவே' பார்ப்பார்கள். தந்தை தன் கையில் போனை வைத்துக்கொண்டு மகனைப் படிக்கச் சொன்னால், அது பிள்ளையின் மனதில் கோபத்தையும் ஏமாற்றத்தையுமே மிஞ்சச் செய்யும். அரளி விதையை விதைத்து விட்டு மாம்பழத்தை எதிர்பார்ப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
கட்டளைகளை விடக் கவனிப்பதே அதிகம்:
குழந்தைகள் காதால் கேட்பதை விட, கண்ணால் பார்ப்பதையே ஆழமாகப் பற்றிக்கொள்கிறார்கள். நீங்கள் போனைத் தள்ளி வைத்துவிட்டு புத்தக வாசிப்பில் ஈடுபட்டால் அல்லது அவர்களுடன் உரையாடினால், அவர்களும் போனைத் தேட மாட்டார்கள்.
தரமான குடும்ப நேரம் (Quality Family Time):
வெறும் "போனைப் பார்க்காதே" என்று சொல்வதற்குப் பதிலாக, போனைத் தவிர்த்துவிட்டு அவர்களுடன் செஸ் விளையாடுவது, கதை பேசுவது அல்லது மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்வது போன்ற மாற்று வழிகளைத் தந்தை உருவாக்க வேண்டும். தந்தை காட்டும் இந்தச் சுய கட்டுப்பாடே மகனுக்கு ஒழுக்கத்தின் முதல் பாடம்.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்றந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்கிறது திருக்குறள். பிள்ளைகள் டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாமல், ஒழுக்கமான பாதையில் செல்ல வேண்டுமானால், பெற்றோர்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான கட்டளைகளைக் குறைத்துக்கொண்டு, மனம் திருந்தி மனக் கட்டுப்பாட்டை வளர்த்து தங்களின் நல்வாழ்வையே அவர்களுக்கு ஒரு பாடமாக மாற்ற வேண்டும். ஏனெனில் நாம் செய்யும் தவறை பிள்ளைகள் மட்டும் செய்யக்கூடாது என்று கண்டிப்பது கண்களை மூடிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை போல்தான். பிள்ளைகளின் ஒழுக்கம் நம் கையில் தான் உள்ளது.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧


Comments
Post a Comment