விளம்பரம் - நவீன எலிப்பொறி.

 

விளம்பரம் எனும் எலிப்பொறி


எலிப்பொறியில் ஒரு சிறு தேங்காய் துண்டு இருக்கும். எலி அதை உணவு என்று நினைத்து உள்ளே போகும். உள்ளே போன பின் தான் தெரியும், அது உணவு இல்லை, அது சிறை என்று.

இன்றைய விளம்பரங்களும் அப்படி தான்.

அதில் ஒரு பைக் (இருசக்கர வாகனம்) இருக்கும், கவர்ச்சி ஆடையில் ஒரு பெண் இருப்பாள். நாம் அதை பார்த்து மகிழ்ச்சி என்று நினைத்து உள்ளே போகிறோம். உள்ளே போன பின் தான் தெரிகிறது, அது மகிழ்ச்சி இல்லை, அது EMI, கடன், தாழ்வு மனப்பான்மை என்று.

பொறியின் இரண்டு முகம்

ஒவ்வொரு எலிப்பொறியிலும் இரண்டு விஷயம் இருக்கும்.

ஒன்று - கண்ணுக்கு தெரியும் இலவச உணவு.

இன்னொன்று - கண்ணுக்கு தெரியாத கம்பி.

விளம்பரத்திலும் அதே தான்.

கண்ணுக்கு தெரிவது - "இதை வாங்கினால் நீ ஹீரோ, நீ அழகு" என்ற ஆசை.

கண்ணுக்கு தெரியாதது - மன அழுத்தம், போட்டி, பண விரயம்.

"முன்பெல்லாம் தரமான பொருளை வைத்திருப்பவர் அதன் தரத்தைச் சொல்லியும், தரமில்லாதவர் கவர்ச்சியைக் காட்டியும் விற்று வந்தனர். ஆனால், இன்றைய போட்டி உலகினில் தரமான பொருட்களை விற்பவர்களுமே விளம்பரக் கவர்ச்சியைக் கையாளத் தொடங்கிவிட்டனர். இதனால், தரமில்லாத பொருட்களை விற்பவர்கள் தப்பிக்க இன்னும் மோசமான போலி கவர்ச்சிகளை நம்பத் தொடங்கியுள்ளனர்."

இளைஞனின் மனது என்னாகிறது?

இளைஞனின் இயற்கையான தேடலை தூண்டி, அதை தன் பொருளோடு இணைத்து விடுகிறார்கள். அவன் பைக்கை பார்க்கவில்லை, அந்த பெண்ணை தான் பார்க்கிறான். ஆனால் மூளை "இந்த பைக் வாங்கினால் அந்த கவர்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்" என்று தவறாக நம்பி விடுகிறது.

விளம்பரம் என்றால் நேரடி விளம்பரம் மட்டும் கிடையாது நம்மில் ஒருவர் போல் இருக்கும் சமூக வலைதள இன்புளூயன்சர்களும் தான். அவர்களில் சிலர் தங்கள் சுய லாபத்துக்காக இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்திச் செல்கின்றனர்.

சுயலாப இன்புளூயன்சர்கள்


இதனால் மூன்று நஷ்டம்.

1. நிஜ உறவுகள் போரடிக்கின்றன.

2. தன் வாழ்க்கையை பார்த்து தாழ்வு மனப்பான்மை வருகிறது.

3. தேவையில்லாத பொருளை வாங்கி கடனாளி ஆகிறான்.


ஆசை இல்லாவிட்டால் உலகம் இயங்காதே?

இது தான் மிக பெரிய கேள்வி. ஆசை இல்லை என்றால் இத்தனை கோடி மனிதர்களுக்கு உணவு எப்படி கிடைக்கும்?


ஆசை தான் உலகின் எரிபொருள். விவசாயி நல்ல விளைச்சலுக்கு ஆசைப்படுவதால் தான் நாம் சாப்பிடுகிறோம்.


ஆனால் ஆசையில் இரண்டு வகை உண்டு.


பசிக்கான ஆசை - "எனக்கும் என் குடும்பத்திற்கும் சோறு வேண்டும்." இது வாழ வைக்கும். இது இருக்க வேண்டும்.

பேராசைக்கான ஆசை - "எனக்கு மட்டும் தான் வேண்டும், அடுத்தவனை விட அதிகமாக வேண்டும்." இது தான் எலிப்பொறி.

பட்டினத்தார் பசியை வெறுக்கவில்லை, பேராசையை தான் வெறுத்தார்.

எலிப்பொறி வைப்பவனை நம்மால் தடுக்க முடியாது. அவன் வைத்து கொண்டே தான் இருப்பான்.

ஆனால் பொறி என்று தெரிந்த எலி, ஒரு போதும் உள்ளே போகாது.

விளம்பரத்தை பார்க்கும் போது "இது பொறி" என்று புரிந்து கொண்டால் போதும். அந்த விழிப்பு ஒன்றே நம்மை காப்பாற்றும். பொருளை வாங்கினாலும் பொறியில் மாட்டாமல் வாழலாம்.

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.