தியானம் என்றால் என்ன? தியான விதிமுறைகள்.

"தியானம் என்பது எண்ணங்களை நிறுத்துவதல்ல, மாறாக விழிப்புணர்வுடன் எண்ணங்களை கவனித்து மனதைத் தூய்மைப்படுத்தும் ஒரு எளிய கலை"

தியானம் என்பது என்ன?

தியானத்தின் அடிப்படைத் தேவை  'சாப்பாடு இருக்கிறது' என்ற தைரியம்:

நேர்மறை எண்ணங்கள் நம் மனதில் நிறைய வேண்டும் என்றால், அதற்கு முதற்படியாக நம் மனதில் ஒரு பாதுகாப்பு உணர்வு (Security) இருக்க வேண்டும்.

"எனக்கு அடுத்த வேளைக்குச் சாப்பிட உணவு இருக்கிறது" என்ற அந்தத் தைரியமும், நிம்மதியும் மனதில் இருக்க வேண்டும். வறுமையும், பசிப் பயமும் இல்லாத அந்த மனத் தைரியமே நேர்மறை எண்ணங்களின் உண்மையான தொடக்கப் புள்ளி.


தொடக்கக் காலக் கட்டுப்பாடு:

சமூக வலைதளங்கள், சினிமா, பாடல்களைத் தவிர்த்தல்:

நாம் செய்யும் தியானத்தின் பலன் நமக்குக் கிடைக்கத் தொடங்க சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். அதுவரைக்கும் சினிமா பார்ப்பது, பாடல்கள் கேட்பதைத் தவிர்ப்பது நலம். அதைவிட மிக முக்கியமாக, சினிமா மற்றும் பாடல்களை விட பல மடங்கு மோசமான சமூக வலைதளங்களை (Social Media) முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இன்றைய 'ரீல்ஸ்' (Reels) மற்றும் 'ஷார்ட்ஸ்' (Shorts) கலாச்சாரம், சில நொடிகளுக்குள் நம் மனதில் பலதரப்பட்ட உணர்ச்சிகளை (விருப்பு, வெறுப்பு, பொறாமை, பேராசை) செயற்கையாகத் திணிக்கிறது. இது தியானத்தின் மூலம் நாம் சேமிக்கும் மன ஆற்றலை அப்படியே உறிஞ்சிவிடும். தொடக்கத்தில் மனதிற்கு வெளியே இருந்து கொடுக்கும் இந்த 'டிஜிட்டல் உணவுக் கட்டுப்பாடு' (Digital Diet) தான் தியானத்தை விரைவாகக் கைகூட வைக்கும்.

பகலில் நீங்கள் சிறிது நேரம் பார்க்கும் சமூக வலைதளங்களால் இரவில் நான்கு மணி நேரம் தியானம் இருந்தாலும் எந்த உபயோகமும் இல்லை.

தியானத்தின் முதல் படி: எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பு:

நம்மில் பலர் தியானம் செய்ய அமரும் முதல் நாளே ஏதோ ஒரு அற்புதம் நடந்துவிட வேண்டும், உடனே மன அமைதி கிடைத்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்புதான் தியானத்தின் முதல் எதிரி.

"இதனால் எனக்கு இப்போது என்ன கிடைக்கும்?" என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நான் இதைத் தொடர்ந்து செய்வேன் என்ற மன உறுதியோடு அமர வேண்டும். அந்தப் பொறுமையே தியானத்தின் அடித்தளம்.

எண்ணங்களை எதிர்கொள்ளும் கலை (Skip Method):

"தியானத்தில் அமர்ந்தால் எண்ணங்களே வரக்கூடாது" என்பது ஒரு தவறான புரிதல். கண்களை மூடினாலே எண்ணங்கள் கண்டிப்பாக ஏதோ ஒன்று வரத்தான் செய்யும். அது மூளையின் இயல்பு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:

உள்ளே வரும் எண்ணம் நல்லதா அல்லது கெட்டதா? என்று ஒரு நொடி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அது தேவையற்ற, எதிர்மறையான (கெட்ட) எண்ணமாக இருந்தால், அதோடு வாதாடாமல் "இப்போது இது வேண்டாம்" என்று மனதில் மென்மையாக 'ஸ்கிப்' (Skip) செய்ய பழக வேண்டும்.

மூன்று மாத முடிவில் நிகழும் மாற்றம்:

தினமும் இவ்வாறு தேவையற்ற எண்ணங்களை 'ஸ்கிப்' செய்து பழகும்போது, மூன்று மாத முடிவில் உங்கள் மனம் ஒரு அழகான நந்தவனத்தைப் போல மாறிவிடும். தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் உள்ளே நுழைய வழியில்லாமல், மனம் முற்றிலும் நேர்மறையான மற்றும் நல்ல எண்ணங்களால் மட்டுமே நிறைந்திருக்கும்.

தியானத்தின் பின்னால் இருக்கும் 'மூளை' அறிவியல்:

நாம் தினமும் தியானம் செய்யும்போது, நம் மூளையின் உள்ளே ஒரு 'பழுதுபார்க்கும் வேலை' (Repair Work) நடக்கிறது. 

1.பதற்றத்தைக் குறைக்கும் சுவிட்ச் (Switch): 

நம் மூளையில் கோபத்தையும் பயத்தையும் தூண்டும் ஒரு பகுதி இருக்கிறது. தியானம் செய்யச் செய்ய, அந்தப் பகுதியின் வேகம் குறைந்து, அமைதியடைகிறது. அதனால் தான் தியானம் செய்பவர்களுக்குச் சட்டென்று கோபம் வருவதில்லை.

2.கவனத்தை அதிகரிக்கும் பயிற்சி: 

தியானம் செய்வது நம் மூளைக்குக் கொடுக்கும் ஒரு 'ஜிம்' (Gym) பயிற்சி போன்றது. நாம் தினமும் தியானம் செய்யும்போது, மூளையின் சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபகசக்திப் பகுதி பலமடைகிறது.

3.மூளையின் புதிய பாதை: 

நாம் தேவையற்ற எண்ணங்களை 'ஸ்கிப்' செய்யப் பழகும்போது, மூளை தன் பழைய எதிர்மறைப் பழக்கங்களை மறந்துவிட்டு, புதிய நேர்மறையான பாதைகளை உருவாக்கத் தொடங்குகிறது.

நிஜ வாழ்க்கையில் தியானத்தின் வெற்றி (உறவுகளில் பக்குவம்):

இந்த மனப் பக்குவத்தை அடைந்த பிறகு, வெளியில் இருந்து யாராவது வந்து உங்களிடம் தேவையில்லாமல் வாதாடினாலோ அல்லது எதிர்மறையாகப் பேசினாலோ, உங்களிடம் இருந்து எந்தவொரு தேவையற்ற எதிர்வினையும் (Reaction) வராது.

அவர்களின் அறியாமையை உணர்ந்து நீங்களும் பேசாமல் மௌனமாகி விடுவீர்கள். உங்களிடம் தர்க்கம் செய்து (Argue பண்ணி) அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதால் உங்களிடம் பேசவே யோசிப்பார்கள். உங்கள் மௌனமும் நேர்மையும் அவர்களுக்குத் தங்களின் தவறை கண்ணாடி போலப் புரிய வைக்கும்.

தியானம் என்பது ஏதோ காட்டில் அமர்ந்து செய்வதல்ல; நம் அன்றாட வாழ்வில் தேவையற்ற எண்ணங்களை வடிகட்டி, மனிதர்களுக்கு மத்தியில் நம் மன அமைதியைக் காக்கும் ஒரு உன்னத கலை!

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.