மனிதன் இயங்குவது எதனால்...?


இயற்கையின் மனித நண்பர்கள்

ஒரு மனிதனும், ஆசை, பயம், நம்பிக்கை என்ற மூன்று நண்பர்களும்,அடர்ந்த வனப்பகுதிக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தார்கள்.


நாள் முழுவதும் சந்தோஷமாகச் சுற்றியதில், அவர்களில் 'மனிதன்' என்றவனுக்குக் கடுமையான களைப்பு ஏற்பட்டது. ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் அவன் அப்படியே சுருண்டு அமர்ந்தான்.


"இனி என்னால் ஒரு அடி கூட நகர முடியாது" என்று கண்களை மூடினான்.


முதலில் வந்தான் ஆசை.


"எழுந்திரு நண்பா! சோர்ந்துவிடாதே. நமக்குத் தேவையான சுவையான சாப்பாடும், ஊருக்குப் போக வேண்டிய பேருந்தும் அந்த மலைக்குப் பின்னால் தான் காத்திருக்கிறது. வா போகலாம்!"


இரண்டாவதாக வந்தான் பயம்.


"சீக்கிரம் எழுந்திரு! இருட்டுவதற்குள் நாம் எல்லையைக் கடக்கவில்லை என்றால், இந்த ஆள்நடமாட்டமில்லாத காட்டில் வனவிலங்குகள் நம்மைத் தின்றுவிடும்!"


மனிதன் முனகினான், "மலைக்கு அப்பால் செல்ல ஆசையும் இருக்கிறது, காட்டை நினைத்து பயமும் இருக்கிறது. ஆனால் என் உடலில் சக்தியே இல்லையே..."


கடைசியாக வந்தான் நம்பிக்கை.


அவன் மனிதனின் தோள் மீது கையை வைத்து, "உன்னால் முடியும் நண்பா. உன் கால்களுக்குள் இன்னும் வலிமை மிச்சமிருக்கிறது. நான் உன்னோடு கடைசி வரை வருகிறேன்" என்று புன்னகைத்தான்.


அந்த நொடி மனிதனின் உடலில் புதிய இரத்தம் பாய்ந்தது. சோம்பலை உதறிவிட்டு சட்டென்று எழுந்தான்.


ஆசை காட்டிய இலக்கை நோக்கி, பயம் கொடுத்த எச்சரிக்கையுடன், நம்பிக்கையின் துணையோடு அவன் பாதுகாப்பாக எல்லையைக் கடந்தான்.


நாமும் ஒரு 'மனிதன்' தான். நம்மைச் சுற்றியுள்ள காடுதான் இந்த 'வாழ்க்கை'. காலையில் எழுவது முதல் இரவு தூங்குவது வரை... ஆசை நமக்கான இலக்கைக் காட்டுகிறது, பயம் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது, நம்பிக்கை நம்மை எல்லையைக் கடக்க வைக்கிறது! இந்த மூன்று நண்பர்களும் நமக்குள்ளும் இருக்கிறார்கள்.


நீங்களும் இதை உணர வேண்டும் என்றால் நேற்று செய்த மூன்று செயல்களை காகிதத்தில் எழுதி அந்த செயல்களின் அடிப்படையை சிந்தித்து பாருங்கள் நீங்களும் ஆசை,பயம், நம்பிக்கையை உணர்வீர்கள்.

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.