ஆன்மீக வியாபாரமும், மூடநம்பிக்கைகளும்.
பயத்தை மூலதனமாக்கும் கார்ப்பரேட் ஆன்மீகம்.
(கற்பனை சித்தரிப்பு சித்திரம்,போலி ஆன்மீகவாதிகளுக்காக உருவாக்கப்பட்டது, உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு தெரியும் மாயை, கடவுள், ஜோதிடம் என்றால் என்னவென்று)அன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் என்பது மனிதனின் மனதை அமைதிப்படுத்தவும், அவனுக்குள் சுய ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் ஒரு வாழ்வியல் நெறியாக இருந்தது. ஆனால் இன்று, அது ஒரு மிகப்பெரிய "வணிகச் சந்தையாக" மாறிவிட்டது.
பயமே முதலீடு :- "உங்களுக்குச் செவ்வாய் தோஷம் இருக்கிறது, இந்த யாகம் செய்யாவிட்டால் விபத்து ஏற்படும்", "இந்தக் கல் மோதிரம் அணியாவிட்டால் தொழில் நஷ்டமாகும்" என்று மனிதனின் பலவீனத்தையும், அச்சத்தையும் தான் இன்றைய ஆன்மீக வியாபாரிகள் தங்களின் முதலீடாகப் பயன்படுத்துகிறார்கள்.
டார்கெட் பேஸ்டு அல்காரிதம் (Target-based Algorithm): இன்று யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் நீங்கள் ஒரு முறை "ராகு கேது பெயர்ச்சி பலன்கள்" என்று தேடினால் போதும்; உங்களுடைய மொபைல் திரை முழுக்க பரிகாரங்கள், ஆன்மீகச் சுற்றுலாக்கள், ராசிக்கற்கள் விற்கும் விளம்பரங்கள் என அல்காரிதம் உங்களை முற்றுகையிடும். மனிதனின் மன உளைச்சலை லாபமாக மாற்றும் தொழில்நுட்பம் இது.
கர்ம வினையும் "இன்ஸ்டன்ட்" பரிகாரங்களும் :-
பழங்கால தத்துவங்களின்படி "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" - அதாவது நம் செயல்களுக்கான விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும். ஆனால் கார்ப்பரேட் ஆன்மீகம் இதற்கு ஒரு புதிய, எளிய வழியைக் கண்டுபிடித்துள்ளது:
"நீங்கள் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் பரவாயில்லை, இத்தனை ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்தத் தனிப்பட்ட யாகத்தையோ அல்லது பூஜையையோ செய்துவிட்டால் உங்கள் கர்ம வினை உடனே நீங்கிவிடும்."
இது மனிதனைத் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்க விடாமல், பணத்தைக் கொடுத்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை உருவாக்குகிறது.
மன உறுதி உள்ள ஒரு மனிதனுக்கு, எக்காலத்திலும் அவனது பகுத்தறிவும் உழைப்பும் துணையாக இருக்கும்.
மன பயம் உள்ள ஒரு மனிதன், பஞ்சாங்கப்படி மிகச்சிறந்த "நல்ல நேரமாக" இருந்தாலும், தன் நிழலைக் கண்டு அஞ்சி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பான்.
அன்றைய ஆன்மீகம் "உன் மனதைச் செம்மைப்படுத்து" என்று கூறியது. இன்றைய கார்ப்பரேட் ஆன்மீகமோ "உன் பணப்பையை எங்களிடம் கொடுத்துவிட்டு, கோள்களை நினைத்துப் பயந்து வாழ்" என்கிறது.
இது பணக்காரர்களின் ஆன்மீகம், ஏழைகளின் ஆன்மீகத்தை பார்க்கலாம் வாருங்கள்.
"லாட்டரி ஆன்மீகம்"
ஏழை எளிய மக்களிடம் இருக்கும் முதல் பிரச்சினை, அவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே தவிர, அவர்கள் உழைத்த உழைப்பைப் பார்ப்பதில்லை.
இவர்கள் நினைக்கிறார்கள் அரை மூடி தேங்காய், இரண்டு வாழைப்பழம் வைத்து கடவுளை வணங்கினால் திடீரென ஒரு நாள் "பங்களா,கார்" என்ற சொகுசு வாழ்க்கை கடவுள் கொடுப்பார் என்று.
குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் எதிர்பார்க்கும் "லாட்டரி மனப்பான்மை".
நிறைய மனிதர்கள் நினைக்கிறார்கள் கடவுளை ஒரு வாகனம் என்று, நாம் சேர வேண்டிய இடத்திற்கு நம்மைத் தோளில் தூக்கிக் கொண்டு போய் சேர்ப்பார் என்று. ஆனால், கடவுள் என்பது வயதான காலத்தில் உதவும் கைத்தடி போல் நாம் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கும் என்று ஒரு நம்பிக்கை. நாம் தான் முயற்சி செய்து எழுந்து நடக்க வேண்டுமே தவிர கைத்தடி நம்மைத் தூக்கிச் செல்லாது.
குடிப்பழக்கம்,புகைப்பழக்கம் என்று உடம்பை கெடுத்துக் கொள்ளும் பழக்கங்களை வைத்துக் கொண்டு, கடவுளை வணங்கினால் கடவுள் நோயிலிருந்து காப்பாற்றுவார், நோயே வராமல் பார்த்துக்கொள்வார் என்று எண்ணுவது.
கடவுள் என்ன, நீ உன் உடம்பிற்குள் ஏற்படுத்திய கழிவை உள்ளே புகுந்து சுத்தப்படுத்துவாரா?
இறுதியில் உடம்பு சரியில்லை என்றால், கடவுள் மீது பழி சுமத்தி ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறாய் என்று தன் தவறை மறைத்துக் கொள்வது.
"என் வறுமைக்குக் காரணம் என் தலைவிதி" என்று தன் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் மனநிலை.
ஒரு மனிதன் எப்போது மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு, தனது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தொடங்குகிறானோ, அதுதான் அவனது வாழ்க்கையின் உண்மையான "நல்ல நேரம்".
மனிதன் தன் மனதையும், மூளையைத் தூய்மையாக வைத்திருந்தாலே, அவனது வாழ்க்கை தானாகத் தூய்மையாகும்!
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧


மிகவும் அற்புதமான சிந்தனை...
ReplyDeleteநன்றிகள் பல...
Delete🙏
ReplyDelete🙏
Delete