உறவுகளை மேம்படுத்தும் வழி.
மனித வாழ்க்கை என்பது உறவுகளால் பின்னப்பட்டது. கணவன்-மனைவி, நண்பர்கள், காதலர்கள் என எந்தவொரு உறவாக இருந்தாலும் அங்கே அன்போடு சேர்த்துச் சில நேரங்களில் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் வருவது இயற்கை. ஆனால், அந்தச் சண்டைகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் அந்த உறவின் ஆயுளும், ஆழமும் அடங்கியிருக்கிறது.
ஈகோ என்னும் படிக்கட்டும்... அதிகரிக்கும் தூரமும்...
உறவுகளுக்குள் சண்டை வரும்போது, நாம் நடந்து கொள்ளும் விதத்தை ஒரு படிக்கட்டுப் பயணத்திற்கு ஒப்பிடலாம். சண்டையின் போது இருவர் எதிர் எதிர் திசையில் இருக்கும் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே பேசினால், இருவருக்குமான தூரம் அதிகரித்துக் கொண்டே தான் போகும்.இங்கே 'படிக்கட்டில் ஏறுவது' என்பது நமது 'ஈகோ' (Ego) அல்லது அகந்தையைக் குறிக்கிறது. "நான் ஏன் இறங்கிப் போக வேண்டும்?", "அவர்தான் முதலில் பேச வேண்டும்" என்று பிடிவாதமாக மேல் நோக்கி ஏறிக்கொண்டே இருந்தால், எவ்வளவுதான் சத்தமாகப் பேசினாலும் ஒருவருடைய உணர்வு மற்றவருக்குக் கேட்காது; தூரம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்.மாறாக, உறவு முக்கியம் என்று நினைத்து, கோபத்தை விடுத்து, அந்தப் படிக்கட்டில் இருவரும் கீழே இறங்கி வந்தால் மட்டுமே இருவருக்குமான இடைவெளி குறைந்து, மீண்டும் அன்போடு கைகோர்க்க முடியும்.
மௌனத்தின் எதிர்பார்ப்பும்... ஏமாற்றத்தின் வலியும்...
உறவுகளுக்குள் வரும் மற்றொரு பெரிய சிக்கல்"நான் மனதில் நினைப்பதை வாயைத் திறந்து சொல்லாமலேயே மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும்" அல்லது "நான் விரும்புவதைச் செய்ய வேண்டும்" என்று எதிர்பார்ப்பது. குறிப்பாக, கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்குள் "என் மேல் அன்பிருந்தால் நான் சொல்லாமலேயே அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்ற மௌனமான பிடிவாதம் இருக்கும்.
ஆனால், உண்மை என்னவென்றால், மனித மனம் ஒரு மாயக் கண்ணாடி அல்ல. எவ்வளவுதான் நெருக்கமான உறவாக இருந்தாலும், ஒருவருடைய எண்ண ஓட்டங்களை மற்றவரால் துல்லியமாகக் கணிக்க முடியாது. "அவராகப் புரிந்துகொள்ளட்டும்" என்று நீங்கள் மௌனமாக இருக்கும்போது, அங்கே எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் மட்டுமே மிஞ்சும். "அவருக்கு என் மேல் அக்கறை இல்லை" என்று நாமே ஒரு தவறான முடிவுக்கு வந்து, மனதிற்குள் கோபத்தையும் எரிச்சலையும் வளர்த்துக் கொள்வோம்.
வார்த்தைகளை விட உணர்வுகள் பெரியதுதான், சந்தேகம் இல்லை. ஆனால், அந்த உணர்வுகளை மற்றவருக்குக் கடத்துவதற்குக் கனிவான வார்த்தைகள் என்னும் பாலம் அவசியம். உங்களுக்கு என்ன வேண்டும், உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அன்போடு, தெளிவாகப் பேசி விடுங்கள். கேட்காமல் கிடைக்கும் அன்பை விட, கேட்டுப் பெறும் புரிதல் உறவை இன்னும் அழகாக்கும்!
வார்த்தைகள் கடத்தப்படும், உணர்வுகள் அல்ல!
சண்டையிட்டுக் கொள்ளும் இருவர், தங்களுக்குள் இருக்கும் பிரச்சினையைத் தாங்களாகவே பேசித் தீர்த்துக் கொண்டால், அங்கே உறவின் நெருக்கம் அதிகமாகும். ஆனால், அங்கே ஒரு மூன்றாவது நபர் 'வக்கீல்' போல நடுவராக உள்ளே நுழையும் போதுதான் உறவில் பெரும் விரிசல் ஆரம்பமாகிறது.
ஒரு சண்டையில் இருவர் நேருக்கு நேர் பேசும்போது, அங்கே வார்த்தைகளைத் தாண்டி அழுகை, குரல் தழுதழுப்பு, தவிப்பு போன்ற உணர்வுகள் இருக்கும். அந்த உணர்வுகள்தான் தவறைப் புரிய வைக்கும்.
ஆனால், ஒரு மூன்றாவது நபர் உள்ளே வரும்போது, உங்களால் சொல்லப்படும் வார்த்தைகளை மட்டுமே அவர் மற்றொருவரிடம் கொண்டு சேர்க்க முடியுமே தவிர, உங்கள் உணர்வுகளைக் கடத்த முடியாது.நீங்கள் வலிக்காக அழுதுகொண்டு சொன்ன ஒரு வார்த்தையை, அந்த மூன்றாவது நபர் மற்றொருவரிடம் சிரித்துக்கொண்டோ அல்லது சாதாரணமான தொனியிலோ வாதமாக முன்வைக்கும் போது, அது பெரிய தப்பாகப் புரிந்து கொள்ளப்படும்.
நீங்கள் காயத்தைக் குறைக்கச் சொன்ன விஷயம், இன்னும் பெரிய விரிசலை உண்டாக்கிவிடும்.
உறவுகளுக்குள் சண்டைகள் வரும்போது, மூன்றாவது மனிதர்களிடம் நியாயம் கேட்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம்முடைய ஈகோ படிக்கட்டுகளிலிருந்து நாம் இறங்கி வந்து, நேருக்கு நேர் அமர்ந்து பேச வேண்டும். வார்த்தைகளை விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நமக்கு நாமே பேசிக்கொள்ளும் போது, எந்தவொரு விரிசலையும் அன்பால் ஒட்டவைத்து விட முடியும்.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

Comments
Post a Comment